வணிக ரகசியமாகக் கருத முடியாது' - டாஸ்மாக் நிறுவனத்தைச் சாடிய நீதிபதி

வணிக ரகசியமாகக் கருத முடியாது' - டாஸ்மாக் நிறுவனத்தைச் சாடிய நீதிபதி
வணிக ரகசியமாகக் கருத முடியாது' - டாஸ்மாக் நிறுவனத்தைச் சாடிய நீதிபதி

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்

மதுபான கொள்முதல் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வழங்க மறுத்த உத்தரவை ரத்துசெய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரர் கேட்ட விவரங்களை தரவேண்டும் என டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம், எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் வழங்க வேண்டும் என கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் டாஸ்மாக் நிறுவனத்திடம் மனு அளித்தார். ஆனால், அந்த மனுவுக்கு டாஸ்மாக் நிறுவனம் பதில் அளிக்கவில்லை. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, மனுதாரர் தரப்பில், வணிக ரகசியம் என கூறி இந்த விவரங்களை வழங்க மறுத்தது தவறு என்றும், தகவல் உரிமை சட்ட விதிகளை கருத்தில் கொள்ளாமல் விண்ணப்பத்தை நிராகரித்தது தவறு என்றும், டாஸ்மாக் நிறுவனத்திற்கு மதுபானங்கள் கொள்முதல் செய்வது வணிக ரகசியம் அல்ல என்பதால் தகவல் வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

அரசு தரப்பில், மதுபான கொள்முதல் தொடர்பாக நிறுவனங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் வர்த்தக ரகசியம் என்பதால் இந்த விவரங்களை வழங்க முடியாது என்றும், தகவல்களை வெளியிட்டால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது. 

மேலும், இந்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் மதுபான கொள்முதல், விலை குறித்த விவரங்களை அறிக்கையாக அரசு தாக்கல் செய்திருந்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,  எந்த நிறுவனத்திடமிருந்து எவ்வளவு விலைக்கு மதுபானம் கொள்முதல் செய்யப்படுகின்றது என்ற விவரங்களை வணிக ரகசியமாக கருதமுடியாது என உத்தரவிட்டு, அரசு நிறுவனமான டாஸ்மாக், வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவேண்டும் என்றும், மதுபானத்தின் விலை என்பது வர்த்தக ரகசியம் அல்ல என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மேலும், இதில், பொது நலன் சம்பந்தப்பட்டுள்ளதாலும், பெருந்தொகையை லாபமாக பெற்றிருப்பதாலும், அந்த தொகை அரசு நல திட்டங்களுக்கு  பயன்படுத்தப்படுவதாலும், இந்த விவரங்களை தெரிவிக்கவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விவரங்களை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com