தமிழக சுகாதாரத்துறை சார்பில் இரும்புச் சத்து மற்றும் போலிக் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்படுகிறது
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவிகள் சத்துமாத்திரை சாப்பிட்டதால், வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அ.பள்ளிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 94 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6ம் வகுப்பில் மட்டும் 2 மாணவர்கள் உள்பட 15 பேர் படித்து வருகின்றனர்.
தமிழக அரசு சார்பில் பள்ளியிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சார்பில் இரும்புச் சத்து மற்றும் போலிக் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவர்கள் அல்லது பள்ளி ஆசிரியர் மேற்பார்வையில் இந்த மாத்திரை மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுகிறது. ஒரு நாளைக்கு ஒரு மாத்திரை வீதம் 2 மாதங்களுக்கு மாத்திரை வழங்கப்படுகிறது. ஒரு சில பகுதியில் ஒரு மாதத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் மதிய உணவு இடைவேளையில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவிகள் சிலர், வகுப்பில் ஆசிரியரின் மேசையில் வைத்திருந்த சத்து மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் அ.பள்ளிபட்டி பகுதியை சேர்ந்த மாணவிகள் சர்மிளா(12), தேகாஸ்ரீ(12), அஷிதா(11), ஷாலினி(11) அபிநயா(11) ஆகிய ஐந்து பேரும் பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த ஆசிரிர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிகளை, பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஏ.பள்ளிபட்டி காவல் உதவி ஆய்வாளர் மதியழகன், விசாரணை நடத்தி வருகிறார். மாணவிகள் சத்து மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உள்ள உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளியில் படித்து வந்த மாணவிகள் 6 பேர் போட்டிபோட்டுக் கொண்டு சத்து மாத்திரை சாப்பிட்டதால், அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதில் ஒரு மாணவியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் சத்துமாத்திரை சாப்பிட்டு மாணவிகள் மயக்கம் அடைந்துள்ள சம்பவம் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.