சென்னை: 'அயன்' பட பாணியில் பாலியல் விடுதி - ரகசிய கும்பல் சிக்கிய பின்னணி

சென்னை: 'அயன்' பட பாணியில் பாலியல் விடுதி - ரகசிய கும்பல் சிக்கிய பின்னணி
சென்னை: 'அயன்' பட பாணியில் பாலியல் விடுதி - ரகசிய கும்பல் சிக்கிய பின்னணி

பாலா குரூப்பில் சென்னையில் வேறு ஏதாவது குடும்பம் இயங்கி வருகிறதா?

கடந்த பத்து நாட்களாகவே சென்னை நகரம் முழுவதும் அதிரடியாக ரைடுகளை நடத்தி பட்டையை கிளப்பி வருகிறது விபச்சார தடுப்புப் பிரிவு  காவல்துறையினர். எழும்பூரில் சக கல்லூரி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடத்திய கல்லூரி மாணவியை காவல்துறை கைது செய்தது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அவருடைய ‘லட்சியக் காதலன்’பிரகாஷை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில் 'அயன்' பட பாணியில் டி.நகர் உமையம்மாள் தெருவில் பாங்கான குடும்பம் போல நடித்து, பேக் கிரவுண்டில், ‘மிட் நைட்’ஷோ நடத்தி வந்த கும்பலை ரவுண்ட் அப் செய்துள்ளது காவல்துறை. இந்த விவகாரம் தொடர்பாக விபச்சார தடுப்பு பிரிவு டீமைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் பேசினோம். அவர் கூறும்போது, ‘ஆந்திர மாநிலத்தைச் பூர்வீகமாகக் கொண்டவர் பாலராம கிருஷ்ணா. பெயர் மங்களகரமாக இருந்தாலும், அவரது வாழ்க்கை மங்களமாக இல்லை. இந்நிலையில் பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்தவர், பலவிதமான வேலைகளை செய்துவந்துள்ளார். அப்போது அவருக்கு அறிமுகமானவர்தான் ஆட்டோ டிரைவரான முருகன். அவர் பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுவார். இரவு நேரத்தில் கஸ்டமர்களுக்காக பலான ஃபிகர்களை ஓட்டிக்கொண்டு வருவது அவருடைய பார்ட் டைம் ஜாப். இந்தத் தொழிலை பாலராம கிருஷ்ணாவிற்கும் கற்றுக்கொடுத்துள்ளார் முருகன்.
 தொழிலில் அடிக்கடி போலீஸ் ரைடு அடிப்பது பாலாவிற்கு பெரும் தொல்லையாக இருந்துள்ளது. இது பற்றி அவர் முருகனிடம் அலுத்துக்கொண்டபோது, ‘என்னப்பா செய்யுறது? எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும் விபச்சார தடுப்பு பிரிவு கண்ணிலிருந்து தப்ப முடியாது. ஏன்னா கஸ்டமர் போல நடித்து நெட்வொர்க்கை பிடிக்க ஒரு டீமே இயங்கிக் கொண்டிருக்கிறது’என்றுள்ளார்.
இதையடுத்து ‘பளிச்’என்று மூளையில் ‘பல்ப்’அடிக்க, தனியாக தொழில் செய்யக் கிளம்பியிருக்கிறார் பாலா. வழக்கமான முறையில் தொழில் நடத்தினால்தானே போலீஸ் மோப்பம் பிடிக்கும்? ஒரு ஃபேமலியாகவே வாழ்ந்து கொண்டு ரகசியமாக தொழில் செய்தால் காவல்துறையால் பிடிக்க முடியாதல்லவா? என்று யோசித்தவன் அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளான்.
அதன்படி கடந்த 3 மாதத்திற்கு முன்பு டி.நகரில் போர்ஷான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளான். அங்கே தன்னுடன் ஒரு வயதான பெண்மணி மற்றும் இரண்டு பெண்களுடன் தங்கிக்கொண்டான். வயதான பெண்மணியை தனது அம்மா என்றும், இரண்டு பெண்களை தன்னுடைய மகள்கள் என்றும் அக்கம்பக்கத்தினரிடம் சொல்லியிருக்கிறான். நடு இரவு ஊரே அமைதியடைந்த பிறகே கஸ்டமர் சர்வீஸ் தொடங்கியிருக்கிறது. அதுவும் வழக்கமான கஸ்டமர்கள் கிடையாது. சொசைட்டியில் பிக் ஷாட்ஸ் மட்டுமே அனுமதி. மற்றபடி வேறு யாருக்கும் தகவல் கூட தெரிவிக்கவில்லை பாலா.
இதனால் அக்கம்பக்கத்தினருக்கும் சந்தேகம் வரவில்லை. காவல்துறைக்கும் விஷயம் தொடக்கத்தில் தெரியவில்லை. சில நாட்கள் கழித்து, தன் வீட்டிலிருந்த பெண்களை அனுப்பிவிட்டு, வெளியூரில் இருந்து வேறு இரண்டும் பெண்களை இறக்கியுள்ளான். கேட்டால் இவர்கள் உறவினர் வீட்டுப் பெண்கள் என்று சமாளித்துள்ளான். மேலும் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு பதில் வேறு சில பெண்கள் இருந்தார்கள். இந்நிலையில்தான் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினருக்கும் காற்றுவாக்கில் சம்திங் ஃபிஷ்ஷி என்று தகவல் பறந்தது. இதையடுத்து விபச்சார தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. அது சுமார் ஒரு மாதகாலமாக அந்த வீட்டை நோட்டமிட்டு, அது குடும்பம் அல்ல, மிட் நைட் கதம்பம் என்பதை உறுதி செய்தது. பிறகு ரெய்டு நடத்தி மொத்த கும்பலையும் கைது செய்துள்ளது’என்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வாளர் ஸ்ரீனிவாசனிடம் பேசியபோது, ‘குற்றவாளிகள் என்னதான் புத்திசாலித்தனமாக பிளான் செய்தாலும், இறுதியில் சிக்கிக்கொள்வது நிச்சயம். பாலராம கிருஷ்ணா விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளது. அவரிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு பெண்களை மைலாபூரில் உள்ள பெண்கள் விடுதியில் தங்க வைத்துள்ளோம். பாலா குரூப்பில் சென்னையில் வேறு ஏதாவது குடும்பம் இயங்கி வருகிறதா? என்பதையும் விசாரித்து வருகிறோம். பொதுமக்கள் தங்கள் அக்கம்பக்கத்தில் சந்தேகம் வந்தால் காவல்துறைக்கு உடனடியாக தெரிவிக்கலாம்’என்றார்.
அபிநவ்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com