வீட்டையும் நாட்டையும் பெண் காவலர்கள் பாதுகாக்கின்றனர்.
பெண் காவலர்களின் நலனுக்காக ஒன்பது முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பெண் காவலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள நேரு விளையாட்டரங்கில், 'தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவலர்களின் 50வது ஆண்டு பொன் விழா' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், 'தமிழ்நாட்டில் இன்று பெண் காவலர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்றால் அதற்கான விதையை விதைத்தவர் கருணாநிதி. இந்த நாட்டை காத்துக் கொண்டிருக்கும் காவல் அரண்கள் பெண் காவலர்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிரும் உடைமையும் பெண் காவலர்களை நம்பி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது' என்றார்.
மேலும், 'எனது பாதுகாப்புக்காக பெண் காவலர்களை வெயிலில் நிற்க வேண்டாம் என்று உத்தரவிட்டேன்' எனக் குறிப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், ' பெண் காவலர்களுக்கான சீருடைகளைத் திருத்தம் செய்யக் கோரிக்கை வைத்தபோது அதை மாற்றியவர் கருணாநிதி.
மக்களைக் காக்கும் பெண் காவலர்களை நாங்கள் எப்போதும் காப்போம். உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதி அதில் கருணாநிதி நடித்தார். அந்த நாடகத்தில் காவலர்களைப் பற்றி ஒரு பாடல் அவர் எழுதினார். அந்த பாடலுக்காக அந்த நாடகம் தடை செய்யப்பட்டது. பின்னர், கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் காவலர்களுக்காக ஆணையம் அமைத்து ஊதியத்தையும் உயர்த்தினார்.
முதன்முதலில் பெண்களைக் காவலராக உருவாக்கி அவர்கள் கையில் துப்பாக்கியைக் கொடுத்தவர் கருணாநிதி. 1973 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் படையில் முதல்முதலாக பெண் காவலர்கள் இணைக்கப்பட்டனர்' என்றார்.
தொடர்ந்து பேசுகையில், 'பெண்களுக்கான விழா இது. நேரம், காலம், இரவு பகல் பாராது பெண் காவலர்கள் மக்களைப் பாதுகாத்து வருகின்றனர். வீட்டையும் நாட்டையும் பெண் காவலர்கள் பாதுகாக்கின்றனர். தற்போது பெண் காவலர்கள் 35,329 பேர் பணியாற்றி வருகின்றனர்'' என்றார்.
இதே விழாவில், பெண் காவலர்களின் நலனுக்காக ஒன்பது முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதில், பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு காவல் பணியையும் செய்து வருவதால், நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, எட்டு மணி என மாற்றியமைக்கப்படும்.
சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு பெருநகரங்களிலும் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை, பெண் காவலர்கள், தங்கள் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வகையில் முழு அளவில் காவல் குழந்தைகள் காப்பகம் அமைக்கப்படும்.
அடுத்ததாக, கருணாநிதியின் நினைவாக ஆண்டுதோறும் 'கலைஞர் காவல் பணி விருது, கோப்பை, குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்க உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.
பெண் காவலர்களுக்கு ஆண்டுதோறும் துப்பாக்கிச் சுடும்போட்டி நடத்தப்படுவது, தமிழ்நாட்டிலும் தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச் சுடுதல் போட்டியை நடத்துவது, பெண் காவலர்கள் தங்களின் குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக டி.ஜி.பி. அலுவலகத்தில் 'பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு' (Career Counselling) அமைப்பது என ஒன்பது அறிவிப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.