கிராம மக்கள் இனிப்பு வழங்கியும், கிடாவெட்டி விருந்து வைத்தும் கொண்டாடினர்.
வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் பல ஆண்டுகளாக முறையான பேருந்து வசதி இல்லாமல் தவித்த கிராம மக்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தில் பேருந்தை எம்.எல்.ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனால் உற்சாகமடைந்த கிராம மக்கள் கிடா வெட்டி விருந்து வைத்து அசத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது கொல்லப்பள்ளி என்ற கிராமம். தமிழகம் மற்றும் ஆந்திர எல்லைப்பகுதியில் இருப்பதால் இந்த கிராமத்திற்கு பல ஆண்டுகளாக முறையான பேருந்து வசதி இல்லாமல் கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று திம்மாம்பேட்டை பகுதிக்கு சென்று அங்கிருந்து பேருந்து மூலம் சென்று வந்து பெரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்.
மேலும், ஆந்திர மாநிலத்திலிருந்து அவ்வப்போது, இந்த கிராமத்தின் வழியாக ஆந்திர அரசு பேருந்து வந்து செல்லும் நிலையில், தமிழக அரசு சார்பில் தங்கள் கிராமத்திற்கு முறையான பேருந்து வசதி ஏற்படுத்தி தர கொல்லப்பள்ளி கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கொல்லப்பள்ளி வழித்தடத்தில் புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, பேருந்தில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர் நடத்துனரிடம் பேருந்தில் பயணித்த அனைவருக்கும் பயணச்சீட்டு எடுத்தார்.இதனை அப்பகுதி மக்கள் இனிப்பு வழங்கி, கிடாவெட்டி விருந்து வைத்த கொண்டாடினர்.மேலும், இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.