மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் என அனைவரும் சமம்
திருக்கோவிலூரில் அரசு விழாவில் பெண்மணி ஒருவர், 'எல்லாம் குறையா இருக்கு' எனக் கூற, 'நீ கொஞ்சம் வாய மூடு' என அமைச்சர் பொன்முடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சி சந்தப்பேட்டை ஜீவா நகர் (ஆடு தொட்டி சந்து)பகுதியில் புதிதாக சீரமைக்கப்பட்ட கோஷா குளம் மற்றும் நகராட்சி சந்தப்பேட்டை விஜயலட்சுமி நகரில் புதிதாக உருவாக்கப்பட்ட பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ நா.புகழேந்தி, திருக்கோவிலூர் நகர மன்றத்தலைவர் டி. என். முருகன், திருக்கோவிலூர் நகராட்சி ஆணையர் கீதா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பொன்முடி, 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்கள் என அனைவரும் சமம். ஆண், பெண் என அனைவரும் சமம் என நிலையை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்' என்றார்.
மேலும், 'அவருடைய திட்டம் தான் இந்த நகர்புற மேம்பாட்டு திட்டம். இதுதான் திராவிட மாடல்' என்று பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் ஒரு பெண், 'எல்லாம் குறையா தான் இருக்கு' என கூற, 'நீ வாய மூடு.. உங்க வீட்டுக்காரர் இருக்காரா' எனக் கேட்டுள்ளார்.
அதற்கு அப்பெண்மணி, ' அவர் எப்பயோ போயிட்டாரு' எனப் பதில் சொல்ல, 'பரவாயில்லை, நல்லவேளை, அவர் போய் சேர்ந்துட்டாரு... நீயே அனுப்பிவிட்டு இருப்ப' என பொன்முடி பேச கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.
பின்னர் சுதாரித்தபடியே, 'பாவம் அது குறைய சொல்லுது. விடுங்க' என பேச்சை திசை திருப்பினார். அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.