ஹிஜாவு நிதிநிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது
சென்னையில் ஒன்றரை லட்சம் பேரிடம் 800 கோடி ரூபாயை நூதன முறையில் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவன விவகாரத்தில், துரிதமாக செயல்பட்ட தமிழக போலீசார், 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 8 பேரை கைது செய்துள்ளனர். 3 கோடி ரூபாய் ரொக்கம், 56 பவுன் தங்க நகைகளும், 1 கிலோ வெள்ளி பொருட்கள், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 8 சொகுசு கார்களும், 162 வங்கி கணக்குகளும் முடக்கம் செய்துள்ளனர். மேலும், 41 கோடி ரூபாய் அசையாசொத்துகளையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், இந்த நிதிநிறுனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்த ஹிஜாவு நிதி நிறுவனம், பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், "தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், மாதம் தோறும் 15 சதவீதம் வட்டி வழங்கப்படும்" என பொதுமக்களுக்கு வலைவிரித்தது.
இதனை நம்பி தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பல கோடி ரூபாய் பணத்தை போட்டிபோட்டி முதலீடு செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை வாரிக்கொண்ட இந்த நிறுவனம், குறிப்பிட்ட நேரத்தில் வட்டித் தொகையை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கவில்லை. அசல் தொகையையும் திருப்பிக்கொடுக்கவில்லை. இப்படி வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றிய தொகை மட்டும் 800 கோடியை தாண்டும் என்கின்றனர். இந்த மோசடியில் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றுதிரண்டு, ஹிஜாவு நிதி நிறுவனம் மீது, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தன்பேரில், சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த நேரு மற்றும் கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி பாலமுருகன், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி மற்றும் அண்ணா நகரைச்சேர்ந்த சுஜாதா பாலாஜி ஆகியோரை கைது செய்த போலீஸ், 32 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
முக்கியக் குற்றவாளியான ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்கள் சௌந்தர்ராஜன், கொளத்தூர் செல்வம் மற்றும் சுரேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில், ஹிஜாவு நிதி நிறுவனம் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் ரொாக்கப் பணம், தங்கம், வெள்ளி, ஆடம்பர பங்களா மற்றும் சொகுசு கார் என பலகோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை கைப்பற்றியுள்ளனர்.
இந்த நிலையில், ஹிஜாவு நிதி நிறுவன அதிபர்களிடம் இருந்து பறிமுதல் செய்தது என்ன என்பது குறித்து, சென்னை பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, "ஹிஜாவு நிதி நிறுவனம் தொடர்பான வழக்கில் 150 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு, 20 நிறுவனங்கள் உள்ளிட்ட 52 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்படு, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு, இதில் 3 கோடியே 34 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், 56 பவுன் தங்க நகைகளும், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் மற்றும் 41 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 162 வங்கி கணக்குகளில் உள்ள 14 கோடியே 47 லட்சம் ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மகாலட்சுமி, அலெக்ஸ்சாண்டர் மற்றும் 5 பேர் மீது எல்.ஓ.சி. இஸ்யூ செய்யப்பட்டுள்ளது. இதில், மகாலட்சுமி, அஸெச்சாண்டர் ஆகிய 2 பேர் வெளிநாடு தப்பிச்சென்றுள்ளதால், அவர்களை பிடிக்க ஆர்.சி.என். வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்த நிதிநிறுனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 2 மாதத்தில் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றார்.
இதனால், "இந்த விவாகரத்தில் போலீசார், துரிதமாகவும், லாவகமாகவும் செயல்பட்டுள்ளதால், முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்பகிடைக்கும் என்ற நம்பிக்கையும் பிறந்துள்ளது" என பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெல்டன் தமிழக போலீஸ்.
கே.என்.வடிவேல்