'பணம் தரியா இல்ல புகைப்படத்தை வெளியிடவா' மிரட்டிய மர்ம கும்பல்
திருச்சி மண்ணச்சநல்லூர் நொச்சியம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராணி ( 30). இவருக்குக் கடந்த 2022 டிசம்பர் மாதத்திலிருந்து இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.அப்போது லோன் ஆப் செயலியான 'ஒரு பைசா வீடு' எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளார்.அதன் மூலம் சிறு தொகையைக் கடனாக பெற்றுள்ளார்.அதற்காகத் தனது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்ட விபரங்களையும் பதிவிட்டு வாங்கிய கடன் தொகையை முறையாகத் திருப்பி செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் அந்த லோன் செயலியைச் செயல்படுத்தும் மர்ம நபர்கள் பணம் பறிக்கும் நோக்கத்தில் ராணி அனுப்பிய அவரது பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தை வேறு பெண்களுடன் இணைத்து நிர்வாணமாக மார்பிங் செய்து அதனை அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து மிரட்டல் விடுத்து ராணியிடமிருந்து இருந்து ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட அவர் திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக சைபர் கிரைம் உதவி காவல் ஆய்வாளர் அருணிடம் கேட்டபோது... 'ரிசர்வ் பேங்க்' அனுமதி இல்லாமல் இது போன்ற செயலிகள் உருவாக்கப்பட்டு ஏமாற்று பேர்வழிகள் அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.இந்த செயலிகள்' ப்ளே ஸ்டோர்' மற்றும் கூகுளில் சென்றால் டவுன்லோட் செய்ய முடியும். விவரம் தெரிந்தவர்கள் வாங்கிய கடனை செலுத்தி விட்டு மிரட்டலுக்கு அஞ்சாமல் இணைப்பைத் துண்டித்து விட்டு வெளியேறி விடுகிறார்கள். ஆனால் ராணி பயந்து போய் தனது பணத்தை இழந்துள்ளார். குற்றவாளிகள் குறித்துத் துப்பு துலக்கப்பட்டு வருகிறது என முடித்துக் கொண்டார்.