சீர் வரிசையுடன் வந்து அசத்திய வடமாநில தொழிலாளர்கள்
திருவள்ளூர் அருகே குடும்ப உறுப்பினராகப் பாசம் காட்டிய உரிமையாளரின் பெண்ணுக்குச் சீர் வரிசையுடன் வந்து அசத்திய வடமாநில தொழிலாளர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி அருகே உள்ள செம்பரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி-பத்மாவதி இவர்களுடைய மகள் விஷ்ணு பிரியா.இவருக்கு மஞ்சள் நீராட்டு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கட்டுமான நிறுவன உரிமையாளரான ராஜாமணி தன்னிடம் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்களை தன்னுடைய உறவினர்களைப் போல் நேரடியாகச் சென்று அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த அழைப்பை ஏற்று 50க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெண்ணுக்குத் தாய்மாமனைப் போல சீர்வரிசையுடன் வந்து விழா உரிமையாளரின் பெண் விஷ்ணு பிரியாவிற்கு நலுங்கு வைத்து மலர் தூவி ஆசீர்வாதம் வழங்கி,அன்பைப் பரிமாறிக் கொண்டனர்.இந்நிகழ்வு விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவி வந்த நிலையில் வட மாநில தொழிலாளர்களை உறவினர் போல் பாவித்து அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது