தோட்டக்கலைத்துறையினர் கண்காணித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
சாலையோரத்தில் இருந்து வெட்டி வீழ்த்தப்பட்ட 40 ஆண்டு ஆலமரம் மீண்டும் நடப்பட்டதில் மகிழ்ச்சி என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தில் சாலையோரத்தில் இருந்து வெட்டி வீழ்த்தப்பட்ட 40 ஆண்டு ஆலமரம் மீண்டும் அதேபகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நடப்பட்டிருக்கிறது. வீழ்த்தப்பட்ட ஆலமரத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது.
பசுமைத்தாயகத்தின் கோரிக்கையை ஏற்று வீழ்த்தப்பட்ட ஆலமரத்தை மீண்டும் நடுவதற்கு ஏற்பாடு செய்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மற்றும் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
ஆலமரம் நட்டதுடன் நமது கடமைகள் முடிவடைந்து விடவில்லை. ஆலமரம் மீண்டும் துளிர்க்கும் வரை அதை தோட்டக்கலைத்துறையினர் கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆலமரம் மீண்டும் தழைப்பதையும், பாதுகாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.