எடப்பாடிக்கு எதிராக அவதூறு முழக்கம்; ஃபேஸ்புக் நேரலை - மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

எடப்பாடிக்கு எதிராக அவதூறு முழக்கம்; ஃபேஸ்புக் நேரலை - மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது?
எடப்பாடிக்கு எதிராக அவதூறு முழக்கம்; ஃபேஸ்புக் நேரலை - மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது?

எடப்பாடி பழனிசாமி தூண்டுதலின் பேரில் தன்னை தாக்கியதாக அமமுக பிரமுகர் புகார்

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய அ.ம.மு.க பிரமுகரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். என்ன நடந்தது?

சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.

அவரை வரவேற்க மதுரை மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி உதயகுமார் எம்.எல்.ஏ-க்கள் ராஜன் செல்லப்பா,  பெரிய புள்ளான் ஆகியோர் திரண்டிருந்தனர்.

முன்னதாக விமானத்திலிருந்து இறங்கிய எடப்பாடி பழனிசாமி, பேருந்து மூலம் விமான நிலைய வளாகத்துக்கு வந்து கொண்டிருந்தபோது உடன் பயணித்த நபர் ஒருவர், எடப்பாடி பழனிசாமியை அவதூறாகப் பேசியவாறு  ஃபேஸ்புக்கில் நேரலை செய்து கொண்டிருந்தார்.

இதனைக் கண்ட எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரது  செல்போனை பறித்துக் கொண்டு மதுரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். 

அப்போது, மதுரை விமான நிலைய வளாகத்தில் எடப்பாடி பழனிசாமியை  வரவேற்பதற்காக கூடியிருந்த அ.தி.மு.க தொண்டர்கள் இந்தத் தகவலைக் கேள்விப்பட்டு அ.ம.மு.க கட்சியைச் சேர்ந்த அந்த நபரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இதைக் கவனித்த விமான நிலைய பாதுகாப்பு போலீஸார் அவரை அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அந்த நபர், சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரைக்கு வந்த பயணி ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்தது. இவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம்.வையாபுரிபட்டி கிராமத்தை சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் (வயது 42) என்ற தகவல் வெளியானது. 

விமானத்தில் வந்தவர்கள் பேருந்தில் விமான நிலைய வளாகத்தில் பேருந்தில் பயணித்தபோது, 'சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர்' எனக் கூறி ஃபேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார்.

அதேநேரம், தன்னை தாக்கி 1.25 லட்சம்  மதிப்புள்ள தனது  செல்போனை பறித்து சென்றதாக  எடப்பாடி பழனிசாமி, அவரது பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன், சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் மணிகண்டன், அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் மகன் உள்ளிட்டோர் மீது மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் அ.ம.மு.கவைச் சேர்ந்த ராஜேஸ்வரன் புகார் அளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து புகார்கள் எதுவும் வராத நிலையில், விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ராஜேஸ்வரனை அவனியாபுரம் போலீஸார் விடுவித்தனர். அவரை அ.ம.மு.க தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 

ராஜேஸ்வரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com