வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணி தீவிரம்
கோவை கார் குண்டு வெடிப்பு விவகாரத்தில் கைதாகி புழல் சிறையிலிருந்த 5 பேரை கோவைக்கு கொண்டு வந்து, அவர்கள் மூலமாக தொழில்நுட்ப ரீதியிலான ஆதாரங்களை சேகரித்து, இந்த வழக்கை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ. தீவிரம் காட்டி வருகிறது.
கோயமுத்தூர் மாநகராட்சி அலுவலகம் அருகிலுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதியன்று அதிகாலையில் கார் ஒன்று வெடித்து தீப்பற்றியது. அதிலிருந்து வெளியே வந்து விழுந்த நபர் உடல் முழுவதும் கருகிய நிலையில் இறந்தார். துவக்கத்தில், காரில் இருந்த கேஸ் சிலிண்டர் வெடித்ததால் விபத்து என்று சொல்லப்பட்டது. ஆனால், காரின் உட்புறமும், வெடிப்பு சிதறல்களையும் ஆராய்ந்த தடயவியல் துறையினர் கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியை கிளப்பியது. அதாவது வெடிகுண்டு தயாரிப்பிற்கான மூலப்பொருட்கள் வைத்திருந்த நிலையில் அந்த கார் வெடித்து சிதறியுள்ளது என்று தகவல் வெளியானது.
தமிழக போலீஸ் விசாரணை நடத்தியதில், கார் வெடிப்பில் இறந்தவர் கோவையைச் சேர்ந்த ஜமேசா முபின் எனும் இளைஞர் என்பது தெரியவந்தது. குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரங்கள் முன்பாக அவரது வீட்டில் இருந்து சாக்கு மூட்டைகள் சில அவரது நண்பர்கள் உதவியுடன் அந்த காருக்குள் ஏற்றப்பட்டது அங்குள்ள சி.சி.டி.வி. பதிவின் மூலமாக கண்டறிப்பட்டது. ஜமேசாவின் நண்பர்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் தங்கி பல இடங்களில் ஆய்வு நடத்தி மேலும் பலரை கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், நவாஸ், உமர், பெரோஸ், அசாருதீன், இஸ்மாயில் ஆகிய ஐந்து பேரையும் கடந்த 9ஆம் தேதியன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியுடன் கோவைக்கு அழைத்து வந்து கோவை போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாக முகாமில் மிகுந்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இனி வரும் நாட்களில் இவர்களை நகரத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் வழக்கமாகச் சென்று வந்த கடைகள், உணவகங்கள், வாங்கும் பொருட்கள் உள்ளிட்ட பல விஷயங்களையும், இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்டவற்றை விசாரிப்பதோடு, இவற்றில் ஏதாவது குற்றமுகாந்திர விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை ஆதாரத்தோடு சேகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். என்.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கையானது கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் மிக முக்கிய நிலையாக கருதப்படுகிறது.
ஆனால், அதே வேளையில், கார் குண்டு வெடிப்பு விவகார விசாரணை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்த நபர்களை, விசாரணைக்கு அழைப்பதும், ஆய்வு செய்வதுமான சூழ்நிலை நிலவுவதால் தங்களின் சுதந்திரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கோவை சிட்டி இஸ்லாமிய அமைப்பு ஆதங்கம் தெரிவித்துள்ளது.
-எஸ்.ஷக்தி