ஆச்சரியப்படுத்திய பறவையினங்களில் மிக முக்கியமானது ‘ஹார்ன் பில்’
’பறவைகள் இல்லாத உலகில் மனிதனால் சில நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாது’ என்றால் பறவைகள் ஆராய்ச்சியில் சர்வதேச புகழ் பெற்ற இந்திய வல்லுநரான சலீம் அலி. அவரை ஆச்சரியப்படுத்திய பறவையினங்களில் மிக முக்கியமானது ‘ஹார்ன் பில்’ என்றழைக்கப்படும் இருவாச்சி பறவைகள். இரண்டு அடுக்குகள் போன்ற அலகு அமைப்புடன் மிக வித்தியாசமான படைப்பான இந்த இருவாச்சி பறவைகள் தென்னிந்தியாவில் கணிசமாக காணப்படும் இடங்களில் ஒன்று கோவை மாவட்டம் வால்பாறை மலை வனப்பகுதி.
மிக உயர்ந்த மற்றும் அடர்ந்த மரங்கள் இருக்கும் வால்பாறையில் இதமான சூட்டுடன் கோடை வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில் இருவாச்சி பறவைகளும் பகல் நேரங்களில் அதிகம் தென்பட துவங்கியுள்ளன. பார்ப்பதற்கு அரிய பறவை வகையான இது தற்போது வெயில் காய்ந்தபடி தங்களின் இறைகளை தேடத்துவங்கியுள்ளதால், இவற்றை கேமராக்களில் பதிவு பண்ண வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில் பறவை ஆராய்ச்சியாளர்கள் அதிக ஜூம் திறனுடைய லென்ஸ்களுடன் வால்பாறைக்கு விசிட் செல்ல துவங்கியுள்ளனர்.
குஞ்சுகளுடன் கூடிய தாய் இருவாச்சிகள் அதிகம் தென்படுவதாக இவர்கள் கூறுகின்றனர்.
குளிர் உச்சத்தில் இருக்கும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இணை சேர்ந்து, ஜனவரி மற்றும் ஃபிப்ரவரி மாதங்களில் குஞ்சு பொரிக்கும் பறவையினங்கள் இவை. கர்ப்பகாலம் மிக குறைவுதான்.
கூட்டமாக வாழும் தன்மையுடைய இந்த பறவையினத்தால் உலக பெருமை வாய்ந்த மேற்குதொடர்ச்சி மலைக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்து வருகிறது.
- எஸ்.ஷக்தி