'இதுவரை 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு!' - அசத்தும் நாகப்பட்டினம் வனத்துறை

'இதுவரை 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு!' - அசத்தும் நாகப்பட்டினம் வனத்துறை
'இதுவரை 13 ஆயிரம் ஆமை முட்டைகள் சேகரிப்பு!' - அசத்தும் நாகப்பட்டினம் வனத்துறை

ஆண்மை அதிகரிக்கும் என்ற வதந்தியை நம்பி, முட்டைகளை எடுத்துச் செல்கின்றனர்

வங்கக் கடலில் ஆலிவ் ரெட்லி எனும் அரிய வகை ஆமைகள் அதிக அளவில் வசித்து வருகிறது. டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் இந்த ஆமைகள் இனப்பெருக்கத்திற்காகப் பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து வந்து வங்கக் கடலோரம் இரவு நேரங்களில் முட்டையிட்டுச் செல்லும். இந்த முட்டைகளுக்காகவே காத்திருக்கும் நாய்களும் கோடியக்கரை காட்டில் உள்ள நரிகளும் அதனைச் சாப்பிட்டு விடும். அத்துடன் இந்த முட்டைகளைச் சாப்பிட்டால் ஆண்மை சக்தி அதிகரிக்கும் என்ற ஒரு வதந்தியை நம்பும் ஒரு கூட்டமும் முட்டைகளைக் கைப்பற்றிச் செல்லும். 

அழிந்து வரும் கடல் உயிரினங்களில் முதன்மையானதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய கடல் உயிரினங்களில் முதன்மையானதாகவும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கம் இந்த ஆமையை வகைப்படுத்தி உள்ளது. ஆமைகளை அழிவிலிருந்து  தடுக்கும் விதமாக வனத்துறை சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் இந்த முட்டைகளைச் சேகரித்து அதற்கான கடலோர பகுதியில் உள்ள பொரிப்பகத்தில் வைத்துப் பொரிக்கச் செய்கின்றனர். இதற்கிடையே இந்த வகை ஆமை இனங்கள் மீனவர்களின் இயந்திர படகு இறக்கையில் மாட்டி இறந்து போய் அதிக அளவில் கடற்கரையில் ஒதுங்குவதும் வருந்தத்தக்க விஷயமாகக் கருதப்படுகிறது. கடலில் மீன்களின் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும் மீனவ நண்பனாக இந்த ஆமைகள் இருப்பதால் இதனைப் பாதுகாக்கப் பலரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இப்படி நாகப்பட்டினம் வன உயிரின கோட்டம் வேதாரணிய வனச்சரகத்தைச் சேர்ந்த கோடியக்கரை ஆற்காடு துறை பகுதிகளில் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் பொரிப்பகத்தில் வைத்துப் பாதுகாத்து தற்போது அவை குஞ்சுகளாக வெளிவந்தவுடன் கடலில் விடப்பட்டது.

இந்த நிகழ்வு குறித்து நாகப்பட்டினம் வனச்சரக அலுவலர் அயூப்கானிடம் பேசினோம்.

"இதுவரை கோடியக்கரை மற்றும் ஆற்காடு துறை பகுதிகளிலிருந்து மொத்தம் 13 ஆயிரத்து 73 முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிப்பகத்தில் வைத்து இதுவரை மூன்று முறை 1050 ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது. முட்டைகள் நாய் மற்றும் நரிகளிடம் சிக்கிச் சேதமடையாத வண்ணம் தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம். அதேபோல் ஆமை முட்டைகளை எடுத்துச் செல்வோர் மீதும் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அழிந்து வரும் இந்த ஆமை இனத்தைக் காப்பாற்றுவதில் பொதுமக்களும் பெரும் பங்காற்ற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com