ரூ.800 கோடி நிதி மோசடியில் சிக்கிய சென்னை ஹிஜாவு நிறுவனம் - இயக்குநர்களை வளைத்த காவல்துறை

ரூ.800 கோடி நிதி மோசடியில் சிக்கிய சென்னை ஹிஜாவு நிறுவனம் - இயக்குநர்களை வளைத்த காவல்துறை
ரூ.800 கோடி நிதி மோசடியில் சிக்கிய சென்னை ஹிஜாவு நிறுவனம் - இயக்குநர்களை வளைத்த காவல்துறை

ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

போலி நிதி நிறுவனம் நடத்தி, ஒன்றரை லட்சம் பொதுமக்களிடம் இருந்து 800 கோடி ரூபாயை ஏப்பம்விட்ட விவகாரத்தில், ஹிஜாவு நிதி நிறுவனம் அதிபர்கள் 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் செயல்பட்டு வந்தது ஹிஜாவு என்ற நிதி நிறுவனம். இந்த நிதிநிறுவனம் பல்வேறு தொழில்களை செய்து வருவதாகவும், "தங்களது நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால், மாதம் தோறும் குறைந்தபட்சமாக 15 சதவீதம் வட்டி வழங்கப்படும்" என பொதுமக்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர்.

இதை நம்பி தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பொது மக்களும் ஹிஜாவு நிதி நிறுவனத்தில், உழைத்துப் பெற்ற பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தனர். 

அவ்வாறு பல கோடி ரூபாய் முதலீடு செய்த வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் வட்டித் தொகையை அந்த நிறுவனம் கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் "வட்டி ஏதும் வேண்டாம், நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பிக்கொடுங்கள்" என அந்த நிதிநிறுவனத்திடம் வலியுறுத்த ஆரம்பித்தனர். ஆனால், முதலீடு செய்த பணத்தையும் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி கொடுக்கவில்லை. இதனால் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுமார் 800 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும், மோசடியில் ஈடுபட்ட ஹிஜாவு நிதி நிறுவனம் மீது, சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். அதன்பேரில் அந்த நிறுவனம் தொடர்புடைய 32 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில் பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.

இந்த மோசடி விவகாரத்தில், சென்னை பெரியார் நகரைச் சேர்ந்த நேரு மற்றும் கோடம்பாக்கம் பகுதியைச்சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, திருவேற்காட்டைச் சேர்ந்த சாந்தி பாலமுருகன், விருகம்பாக்கத்தைச் சேர்ந்த கல்யாணி மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சுஜாதா பாலாஜி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த நிறுவனத்தின் இயக்குநரான சௌந்தர்ராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியாக கருதப்படும், ஹிஜாவு நிதி நிறுவன இயக்குநர்களான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த செல்வம், சுரேஷ் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை காவலில் எடுத்து விசாரித்தால், பல  உண்மைகள் கிடைக்கும் என்பதால், அந்த 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க  போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இதனால், ஹிஜாவு நிறுவன மோசடி விவகாரம், முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com