என்.எல்.சி.யை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு அரசுப் பேருந்தை மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்கி பேருந்தின் கண்ணாடியை உடைத்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
"நெய்வேலியில் எடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி எரிதிறன் குறைந்தது என்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும். புவிவெப்பமயமாதலை கட்டுப்படுத்த படிம எரிபொருள் பயன்பாட்டை குறிப்பிட்ட காலஅளவுக்குள் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" என்று சூற்றுச்சுழல் நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த 60 ஆண்டுகளாக நிலத்தடி நீரை உறிஞ்சி வருவதால் 1,000 அடிக்குமேல் நீர்மட்டம் குறைந்துபோய் சுற்றுச்சூழலையும் சீரழித்துவிட்டது. ஆகமொத்தம் பாதிக்கப்பட்ட பகுதியாக கடலூர் மாவட்ட தாது அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், "என்.எல்.சி. நிறுவனத்தைக் கண்டித்தும் தமிழக அரசைக் கண்டித்தும் நிலங்களைக் கையகப்படுத்துவதை நிறுத்த வலியுறுத்தியும் முழு கடையடைப்புப் போராட்டம் நடைபெறும்" என பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
இதனிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரியசெவலில் இருந்து பண்ருட்டி நோக்கி வந்த அரசுப் பேருந்து மீது மர்ம நபர்கள் நேற்று இரவு கல் வீசி தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில், பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமடையாமல் தப்பினர்.
இதனைத்தொடர்ந்து, இன்று கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. போராட்டத்தையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்டத்தில் பா.ம.கவைச் சேர்ந்த நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட தகவல் மாவட்டம் முழுவதும் பரவியதால் பதட்டம் நீடித்து வருகிறது. இதனால், கடலூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.