"இனி மக்கள் ஏமாறமாட்டார்கள்"
சட்டமன்றத்தேர்தலின்போது 520 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதில் ஒன்றை கூட வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றவில்லை என அதி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரமணி குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்துள்ள தும்பேரி பகுதியில் அ.தி.மு.க. சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அ.தி.மு.க. வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சின்னையா மற்றும் வீரமணி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் வீரமணி, கள்ளிப்பால் ஊற்றி குழந்தையைக் கொல்லும் நிலையை மாற்றி தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என புகழாராம் சூட்டியவர்,
சட்டமன்றத் தேர்தலின்போது 520 வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. அதில் ஒன்றைகூட வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றவில்லை. தி.மு.க. ஆட்சியின் நிர்வாகத்திறமையின்மையால் தமிழ்நாட்டின் கடன் 1 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என குற்றம் சாட்டியவர், சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆட்சிக்கு வந்தவர்கள் தி.மு.கவினர். இனிமேல் அவர்களிடம் மக்கள் ஏமாறமாட்டார்கள் என்றார்.
இதனைத்தொடர்ந்து, பேசிய முன்னாள் அமைச்சர் சின்னையா, பெண்களுக்கு மாத உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தி.மு.கவினர் வாக்குறுத்தி கொடுத்து 2 வருடமாகியும் அதை நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார்.