போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
ஏலகிரிமலை அடிவாரத்தில் ஆபத்தான பைக் சாகசத்தில் ஈடுபட்டும் இளைஞர்களால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்துள்ள சின்ன பொன்னேரி பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. அப்போது எருது விடும் திருவிழாவை முடித்துக்கொண்டு திரும்பிய ஒருசில இளைஞர்கள், ஏலகிரி மலை அடிவாரத்தில் உள்ள சாலையில் திடீரென ஆபத்தான முறையில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தின் முன்சக்கரத்தை அப்படியே முன்னே தூக்கிக் கொண்டு ஓட்டினார். அவரது பின்னாடி இருந்த இளைஞர், கீழே விழுந்துவிடாமல் இருக்க அவரைக் கட்டித் தழுவிக்கொண்டு பயணித்த காட்சி கண்டு, அந்த வழியாகச் செல்லும் பொது மக்களும், சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சம் அடைந்தனர்.
எனவே, இதனை கருத்தில் கொண்டு இது போல் ஆபத்தான சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.