ஓராண்டுக்கு மட்டுமே அப்துல் ஹக்கீம் உயிருடன் இருக்க வாய்ப்பு
கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கைதிக்கு 3 மாதம் கூடுதல் விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் அப்துல் ஹக்கீம். இவர், தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அப்துல் ஹக்கீமுக்கு விடுப்பு வழங்கக்கோரி, அவரது மனைவி ரஹ்மத் நிஷா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 30 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.
தற்போது, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்துல் ஹக்கீமுக்கு வழங்கப்பட்ட 30 நாட்கள் விடுப்பு முடிவடைந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தர் மற்றும் நிர்மல்குமார் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, "அப்துல் ஹக்கீமுக்கு தொடர் சிகிச்சை அளிக்கவேண்டும்" என கோவை மருத்துவமனை அளித்த அறிக்கையை அவரது மனைவி தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், "ஓராண்டுக்கு மட்டுமே அப்துல் ஹக்கீம் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ அறிக்கை கூறியுள்ளதால், மூன்று மாதங்கள் அவருக்கு கூடுதலாக விடுப்பு வழங்கப்படுகிறது" என உத்தரவிட்டனர்.
மேலும், "வரும் ஜூன் 7 ம் தேதி சென்னை புழல் சிறையில் அப்துல் ஹக்கீம் சரணடையவேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள், "அதுவரை அவருக்கு பாதுகாப்பாக செல்லும் போலீசார், மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் போது, தாமதப்படுத்தக்கூடாது" என்றும் அறிவுறுத்தினர்.