போலீசாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு நவம்பர் 15 ல் தேவகோட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் மற்றும் அவரது நண்பர் முகமது யூசுப் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 35 ஆயிரம் மதிப்புள்ள 1.830 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த ராமநாதபுரம் எஸ்.பி பட்டினத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் கிடைத்தன.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தை சேர்ந்த ஏட்டு சரவணன் ,காவலர் அருண்பாண்டி ஆகியோர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பல்லடம் காவல் நிலைய எல்லையில் சின்ன கரை சோதனை சாவடியில் இரவு பணியில் இருந்த போது அந்த வழியாக வந்த ஆட்டோவினை சோதனை செய்து பார்த்ததில் சுமார் மூன்று கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டனர்.
கஞ்சா கொண்டு வந்தவர்களை விரட்டியடித்துவிட்டு கைப்பற்றிய கஞ்சாவை சட்ட விரோதமாக பதுக்கி வைத்துள்ளனர் அவர்கள். பின்னர் தேவகோட்டை, எஸ்பி பட்டினத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரிகளுக்கு ரூபாய் 50 ஆயிரத்துக்கு மூன்று கிலோ கஞ்சாவை விற்பனை செய்துள்ளனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த ஏட்டு சரவணன், காவலர் அருண்பாண்டியன் ஆகியோரை தேவகோட்டை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக போலீஸாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.