'என் உயிருக்கு ஆபத்து' - கோவை இளைஞர் கதறல்

'என் உயிருக்கு ஆபத்து' - கோவை இளைஞர் கதறல்
'என் உயிருக்கு ஆபத்து' - கோவை இளைஞர் கதறல்

சஞ்சய் ராஜாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் கூறி மனு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை வாலிபர் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த சத்தி பாண்டி என்ற ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த வழக்கில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த சஞ்சய் ராஜா என்பவர் சரணடைந்தார். அவரை விசாரணைக்காக, கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார், சரவணம்பட்டிக்கு அழைத்துச் சென்றபோது அங்கு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டுள்ளார். 
அப்போது, தற்காப்பு நடவடிக்கையாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் காலில் சுட்டார். இதில், படுகாயமடைந்த சஞ்சய்ராஜா கோவை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி சஞ்சய் ராஜாவின் நண்பர் முனிரத்தினம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஞ்சய் ராஜாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், அவரது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனால் அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றவேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார். 
மேலும், சஞ்சய் ராஜாவை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடவேண்டுமென மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர் மற்றும் பி.பி. பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவுக்கு, கோவை மாநகர காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com