மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது வீசினார் கலா
கன்னியாகுமரி அருகே, கேலி, கிண்டல், பாலியல் சீண்டலை தட்டிக்கேட்ட பெண் ஒருவரை ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் அடித்து உதைத்து மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்ரவதை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் பகுதியைச் சேர்ந்தவர் கலா (வயது35). மசாஜ் சென்டரில் வேலை செய்து வருகிறார். கணவரை இழந்த இவர் தனது 9 வயது மகளுடன் தனிமையில் வசித்து வருகிறார். வீட்டில் தனிமையில் இருப்பதால் தனது மகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருதிய கலா, அவரை காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார்.
இந்தநிலையில், மசாஜ் சென்டருக்கு கலா செல்லும்போது, அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் சிலர், கலாவை கேலி, கிண்டல் செய்துள்ளனர். மேலும், அவரை அழைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளனர்.
இதனால், பயந்துபோன கலா, தனது பாதுகாப்பிறக்காக மிளகாய்ப்பொடியை கைவசம் கொண்டு சென்று வந்துள்ளார். இந்த நிலையில், கலா தனது மசாஜ் சென்டருக்கு வழக்கம் போல் போவதற்காக மேல்புறம் பகுதிக்கு வந்தபோது அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கலாவை பார்த்து மீண்டும் கிண்டல், கேலி செய்தும், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கலா, தான் கைவசம் வைத்திருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து ஆட்டோ டிரைவர்கள் மீது வீசியுள்ளார். உடனே அங்கு நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர்களில் ஒரு சிலர் கலாவை பலவந்தமாக பிடித்து, கை கால்களை துணியால் கட்டி மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கி உள்ளனர்.
மின்கம்பத்தில் ஒரு மணி நேரத்திற்குமேல் கலா கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அருமனை போலீசார் மின்கம்பத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த கலாவை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆட்டோ ஓட்டுநர்கள் கலாவுக்கு பாலியல் சீண்டல் கொடுத்ததும், அவரை மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்தரவதை செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 2 ஆட்டோ ஓட்டுநர்களை அருமனை போலீசார் கைது செய்தனர்.
மகளிர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், ஒரு பெண்ணை மின்கம்பத்தில் கட்டிவைத்து சித்தரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.