நவீன முறையில் போதைப்பொருள் கடத்தல் - போலீசாருக்கு டிமிக்கு கொடுக்கும் பலே கும்பல்

நவீன முறையில் போதைப்பொருள் கடத்தல் - போலீசாருக்கு டிமிக்கு கொடுக்கும் பலே கும்பல்
நவீன முறையில் போதைப்பொருள் கடத்தல் - போலீசாருக்கு டிமிக்கு கொடுக்கும் பலே கும்பல்

போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 8 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

ரயில் மூலம் போதைப்பொருட்களை கடத்துவது எளிது என்பதால், கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை கடத்தும் கும்பல், தங்களது கடத்தல் தொழிலுக்கு ரயிலை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரிக்கு வந்த ரயிலில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 8 கிலோ 400 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் கும்பல், தாங்கள் காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க புதியபுதிய வழிமுறைகளையும், நவீன யுக்திகளையும் கையாண்டு வருகின்றனர். ஆனால், போதைப்பொருட்களை விற்பனை செய்ய அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை போலீசார் தேடித்தேடி கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து, கண்காணிப்பு பயணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் இருந்து புதுவைக்கு வந்த ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பையில் 4 பார்சல்கள் இருந்தன. அதனை போலீசார் பிரித்து பார்த்தபோது, அதில் 8 கிலோ 400 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக  8 கிலோ கஞ்சாவை கைப்பற்றிய ஒதியஞ்சாலை போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். மேலும், கஞ்சாவை ரயில் மூலம் புதுச்சேரிக்கு கடத்தி வந்தது யார் என்று தெரியாததால், அவர்களை கண்டறிந்து கைது செய்யும் பணியில் தீவிரம்காட்டி வருகின்றனர்.
ரயில் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்துவது எளிது என்பதாலும், முன்பதிவு செய்யாத ஒரு ரயில் நிறைய பயணிகள் பயணம் செய்வதாலும், ரயில் பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்வதாலும் போலீசாரிடம் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிக்கும் நிலை உள்ளது. எனவே, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவதன் மூலமே இது போன்ற குற்றங்களை கட்டுப்படுத்தமுடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com