ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா- மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும்
ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா உள்ளிட்டவைகள் குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆளுநர் கேட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லியிருப்பது ஏற்புடையது அல்ல. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சொல்லி மசோதா நிறைவேற்றி அனுப்புவோம்.
சட்டம் இயற்ற ஏற்கனவே அதிகாரத்தை கொடுத்துள்ளதால் நீதிமன்றம் செல்ல தேவையில்லை. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழுவை நியமித்து பொதுமக்களிடம், விளையாட்டை நடத்துகிறவர்களிடம் என 95 சதவீதம் பேரிடம் கருத்துக்களை கேட்டு தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
தமிழக அரசிடம் மத்திய தகவல் துறை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு முறையான ஆட்சேபனையை எல்லாம் தெரிவித்துள்ளோம். பொதுமக்களை காப்பாற்ற கொண்டுவரப்பட்ட சட்டம் இது. நாங்கள் கண்துடைப்புக்காக தடைச் சட்ட மசோதாவை கொண்டு வரவில்லை. வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட மசோதாவை கொண்டு வருவோம் என்று தெரிவித்தார்.
மேலும், இரண்டாவது முறையாக மசோதா நிறைவேற்றி அனுப்புவோம். அதையும் கிடப்பில் போட்டால், அதற்கு பின்னர் இதுகுறித்து ஆலோசிப்போம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஆளுநருக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்படவில்லை என்ற அண்ணாமலையின் கருத்திற்கு, தமிழகத்தின் ஆளுநர் அண்ணாமலையா இல்லை ஆர்.என்.ரவியா என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பினார்.
அரசிடம் ஆளுநர் கேட்ட விளக்கம் குறித்து அண்ணாமலைக்கு எப்படி தெரியும். அண்ணாமலையை அழைத்து இந்த ரகசியம் குறித்து ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறாரா என தெரியவில்லை. எந்த நேரத்திலும் அரசிடம் ஆளுநர் கேட்ட கேள்விகள் குறித்து விளக்கம் தர தயாராக உள்ளேன். இந்த இடைப்பட்ட 4 மாதக்காலத்தில் 12 பேர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பிற்கு எல்லாம் யார் காரணம் என்று மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும். அதற்கான முன்னுதாரணமாகவே தமிழ்நாட்டில் இந்த தடைச் சட்டத்தை கேட்கிறோம். மற்ற மாநிலங்களும் இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.