முடிவுகளை வெளியிடக் கோரி, #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது
குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2022) ஜூலை 24ஆம் தேதி 7,301 காலிப்பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை எழுத 22,02,942 பேர் விண்ணப்பித்தனர். 18,36,535 பேர் தேர்வெழுதினர். எழுத்துத் தேர்வு நடைபெற்று முடிந்து சுமார் 7 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்று தேர்வர்கள் இடையே கேள்வி எழுந்தது.
இதனிடையே, குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி, #WeWantGroup4Results என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. டிஎன்பிஎஸ்சி தொடர்பான மீம்ஸ்களும் இந்த ஹேஷ்டேகில் பகிரப்பட்டன.
குரூப் 4 தேர்வை அறிவித்து, முடிவை அறிவிப்பதற்கு ஓராண்டு காலத்தை பணியாளர் தேர்வாணையம் எடுத்துக் கொள்வது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். பணியாளர் தேர்வின் அனைத்து நடைமுறைகளும் 5 மாத காலத்தில் முடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார். குரூப் 4 தேர்வு முடிவை வெளியிடாமல் வேண்டுமென்றே காலதாமதம் செய்வதற்கான காரணம் என்ன என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு, கடந்த மாதம் 14ஆம் தேதியன்று விளக்கமளித்த டிஎன்பிஎஸ்சி, 18 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் பங்கேற்றதாலும், விடைத்தாள்களின் இருபாகங்களும் தனித்தனியே ஸ்கேன் செய்யப்பட்டு சரிபார்ப்புபணிகள் மேற்கொள்ளப்படுவதாலும், தேர்வு முடிவு மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளைத் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது. இந்த அறிவிப்பு தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரிடம் பெரும் ஆசுவாசத்தை அளித்துள்ளது.