‘50 ஆண்டுகளுக்கு மேல் சேவை’- கும்கி யானை கலீமை பாராட்டி வழியனுப்பிய வனத்துறை

‘50 ஆண்டுகளுக்கு மேல் சேவை’- கும்கி யானை கலீமை பாராட்டி வழியனுப்பிய வனத்துறை
‘50 ஆண்டுகளுக்கு மேல் சேவை’- கும்கி யானை கலீமை பாராட்டி வழியனுப்பிய வனத்துறை

கலீம் 50 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறைக்கு சேவையாற்றியுள்ளது

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் 100க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களில் வெற்றிகரமாக காட்டு யானைகளை விரட்டிய கும்கி யானை கலீமை பாராட்டி  வனத்துறையினர் வழியனுப்பி வைத்தனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த யானைகள் வளரும் முகாமில் 26 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. 

இங்குள்ள யானைகளுக்கு பாகன்கள் நியமிக்கப்பட்டு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இந்த யானைகள்  வனப்பகுதியை விட்டு வெளியேறி அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடிக்கவும், கும்கிகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

இதில், குறிப்பாக டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் உள்ள கலீம் என்ற கும்கி யானை தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற பல்வேறு மாநிலங்களில் காட்டு யானைகளை பிடிக்கும் ஆபரேஷன்களில் பங்கெடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது. 

குறிப்பாக பொள்ளாச்சியை மிரட்டிய அரிசி ராஜா மற்றும் சின்னத்தம்பி, விநாயகா உள்ளிட்ட யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்ததில் கும்கி கலீமின் பங்கு மிக முக்கியமானது. மேலும் மேட்டுப்பாளையம் பகுதியில் வனத்துறைக்கு போக்கு காட்டிய பாகுபலி யானைக்கு கால ரெய்டை பொருத்தும் பணியில் கும்கி கலீம் ஈடுபடுத்தப்பட்டது. 1972ஆம் ஆண்டு முதல்  பராமரிக்கப்பட்டு வரும் கலீம் 50 ஆண்டுகளுக்கு மேலாக வனத்துறைக்கு சேவையாற்றியுள்ளது. 

இந்த நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹீ மற்றும் வனத்துறை முதன்மை தலைமை பாதுகாவலர் சீனிவாச ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள்  உலாந்தி வனச்சரகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் அருகே உள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமுக்கு அதிகாரிகள் சென்றனர். 

அங்கு பல்வேறு வனப்பணிகளுக்காகவும், கும்கி ஆப்ரேஷன்களுக்கு, பயன்படுத்தப்பட்டு வந்த 60 வயது பூர்த்தி அடைந்த கும்கி யானை கலீமுக்கு ஓய்வு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரிகள் அணிவகுத்து நின்று கும்கி யானை கலீமுக்கு  மரியாதை செலுத்தினர். மேலும் கலீமின் சேவையை பாராட்டும் வகையில் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com