கிராம மக்கள் யானைகளுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த காட்டு யானைகளுக்கு நடைபெற்ற இறுதி சடங்கில், அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் முருகேசன் என்ற விவசாயிக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அவர் , ராகி, சோளம் மற்றும் தென்னை உள்ளிட்டவை பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார். விளைநிலங்களில் காட்டு விலங்குகள் நுழைவதை தடுக்கும் வகையில், மின்வேலி அமைத்துள்ளார்.
இந்த நிலையில், இரவு நேரத்தின்போது, உணவு மற்றும் தண்ணீர் தேடி 5 காட்டு யானைகள் அந்த வழியாக வந்துள்ளன. அதில் 2 பெண் யானைகள் மற்றும் மக்னா யானை மற்றும் 2 குட்டி யானைகள் உள்ளிட்டவை அடங்கும். இதில் 2 குட்டி யானைகள் தவிர மற்ற யானைகள் அனைத்தும், மின்வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி, இறந்துபோன 2 பெண் யானை, மற்றும் ஒரு ஆண் யானை ஆகியவற்றை பிரேத பரிசோதனை செய்தனர். இதனைத்து தொடர்ந்து, ராட்ச கிரேன் உதவியுடன் யானைகளை அடக்கம் செய்தனர்.
இந்த நிலையில், யானைகள் புதைத்த இடத்தில் அப்பகுதி கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, மஞ்சள், குங்குமம் தெளித்தும், மலர் மாலை அணிவித்தும் யானைகளுக்கு கண்ணீர்மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே, இறந்துபோன யானைகள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை 2 குட்டி யானைகள் சோகத்துடன் சுற்றிச்சுற்றி வந்த காட்சி, காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைத்தது குறிப்பிடத்தக்கது.