தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும்.
இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக திருநெல்வேலியில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஒரு பிரிவினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் கருத்துக் கேட்பு கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து, கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
நீதிமன்றம் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட கமிட்டியில், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார் மற்றும் சுகி சிவம் உள்ளிட்டோர் உறுப்பினர்களான உள்ளனர்.
இந்நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் தங்கள் கருத்துகளை பதிவதற்காக கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியவுடன் ஒரு சிலர் மேடை அருகில் சென்று இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டத்தில், ஏன் இந்துக்கள் கடவுள் படம் இடம்பெறவில்லை என்று கூறி, நிகழ்ச்சி அமைப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த தமிழ் தேசிய தன்னுரிமை கட்சி தலைவர் வியனரசு, இந்து அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தால் இரு தரப்பினரிடைய கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மிகவும் மோசமடைந்தது.
இதையடுத்து, கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில், திருநெல்வேலி மாநகரக் காவல் துணை ஆணையாளர் சரவணகுமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அங்கிருந்தவர்கள் யாரும் காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்காமல், மேடை முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேடையில் இருந்த கமிட்டி உறுப்பினர்கள் கேட்டுக்கொண்ட பிறகும் ஒரு தர்ப்பினர் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மேடையில் வைக்கப்பட்ட பேனரில் கடவுள் படம் மாட்டப்பட்டது.
இதனிடையே, கூச்சல் குழப்பம் காரணமாக கருத்து கேட்பு கூட்டத்தை பாதியில் முடித்துக் கொள்வதாகவும், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கருத்துக்களை தபால் மூலமாக, இந்து அறநிலை துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து, போலீசார் ஒவ்வொருவரையும் சமாதனப்படுத்தி மண்டபத்தை விட்டுவெளியே பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். அவர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை அதற்கு உரிய படிவத்தில் எழுதி, அதனை குழுவினரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
கூட்டத்தின் நிறைவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது , சென்னை உயர்நீதி மதுரை கிளை உத்தரவுப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவது, அதற்கான நெறிமுறைகளை வகுப்பது உள்ளிட்டவை முதன் முதலாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலத்தில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் எழுத்து வடிவில் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும். இங்கு பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில், அறிக்கையாக தொகுத்து நீதிமன்றத்தில் முறைப்படி ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்.