பீமரத சாந்தி யாகம், மகா சண்டி ஹோமம், ஆயுள் ஹோமம் நடத்தப்பட்டது
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 70-வது வயதைப் பூர்த்தி செய்ததைத் தொடர்ந்து திருக்கடையூர் கோவிலில் அவரது பெயரில் மனைவி துர்கா ஸ்டாலின் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் அமைந்துள்ள திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான பிரசித்தி பெற்ற ஸ்ரீஅபிராமி சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
தேவாரம் பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் எனக் கூறப்படுவதால் அட்ட வீரட்டான தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால், இங்கு 60, 70, 80, 90, 100 ஆகிய வயதுகளைப் பூர்த்தி செய்தவர்கள் இங்கு சிறப்பு யாகங்கள் செய்து அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால், இங்கு நாள்தோறும் ஏராளமானவர்கள் வந்து சிறப்பு யாகங்கள் செய்து அம்பாளை வழிபட்டு செல்வது வழக்கம். அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று (மார்ச் 7) வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற துர்கா ஸ்டாலின் கஜ பூஜை, கோ பூஜை, அஸ்வ யாக பூஜைகளை செய்தார். பின்னர், கோயிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 70 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அவரது ராசி, நட்சத்திரம் சொல்லி அவரது பெயரில் பீமரத சாந்தி யாகத்தினை துர்கா ஸ்டாலின் நடத்தினார்.
ஹோமம் நடைபெற்ற நூற்றுக்கால் மண்டப வளாகத்தில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் அவர் கோவிலுக்குள் சென்று கள்ள வர்ண விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி மற்றும் ஸ்ரீ அபிராமி அம்பாள் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார்.
தொடர்ந்து, தரங்கம்பாடி தாலுகாவில் கீழ பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மகத்தையொட்டி சிறப்பு மகா சண்டிஹோமம், ஆயுள் ஹோமம் உட்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.
இதில் துர்கா ஸ்டாலின் உட்பட அவரது உறவினர்களும் கலந்துகொண்டனர். பின்னர், மேளதாளம் முழங்க, சிவாச்சாரியார்கள், புனித நீர் கலசங்களைத் தலைகளில் தாங்கி, கோயிலை வலம் வந்தனர். கோயில் கருவூலத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இந்த ஹோமத்தில் கலந்துகொண்ட உள்ளூர் பென்களுக்கு துர்கா ஸ்டாலின் உணவு பரிமாறினார்.
தொடர்ந்து அப்பெண்களுக்கு புடவை, மாங்கல்யம் ஆகிய பொருள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏக்கள் பூம்புகார் தொகுதி நிவேதா முருகன் மற்றும் சீர்காழி பன்னீர்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.