இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. தற்போது உடல்நலம் தேறி வருகிறார்
ராமநாதபுரம் மாவட்டம், பெருங்குளம் கிராமத்தின் தலைவராக இருக்கும் மாரி என்பவர் கடந்த 4-ம் தேதி அப்பகுதியில் உள்ள கிராம நூலகத்தின் கதவுகளை உடைக்க முயன்றவர்களை கண்டித்துள்ளார். இந்தக் கும்பல் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அக்கும்பல் மாரியை தாக்கியதுடன் கழுத்தில் வாளால் வெட்டவும் முயன்றனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாரியின் மகள், வாளைத் தடுத்து தனது தந்தையைக் காப்பாற்றிவிட்டு கத்தி கூச்சல் எழுப்பியுள்ளார். இம்மாணவி பிளஸ் 2 படித்து வருகிறார்.
மாணவியின் சத்தம் கேட்டு அங்கு கிராம மக்கள் திரண்டு வந்துள்ளனர். இதனைப் பார்த்து ரவுடி கும்பல் தப்பிச் சென்றுவிட்டது. இச்சம்பவத்தில் மாணவிக்கு இடது கையில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று நடந்த பிளஸ் 2 செய்முறைத் தேர்வினைக் கையில் கட்டு போட்ட நிலையில் எழுதியுள்ளார். இச்சம்பவத்தில் மாரியையும் அவரது மகளையும் தாக்கிய பெருங்குளம் விஜய், கபிலன், அசோக், கமல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார், தப்பிச் சென்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
''என்ன நடந்தது?'' என கிராமத் தலைவர் மாரியிடம் பேசினோம். '' ஊருக்குள் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா விற்பனை செய்கின்றனர். கஞ்சா போதைக்கு அடிமையாகும் கிராமத்து இளைஞர்களால் அவர்களது குடும்பமும் பாதிப்புக்குள்ளாகிறது. இதனை ஊர் மக்களுடன் சேர்ந்து கண்டித்தேன்.
இந்தப் பிரச்னையினால்தான் என்னைத் தாக்க முயன்றனர். நல்லவேளை எனது மகள் என்னை காப்பாற்றினார். ஆனாலும், தேர்வு சமயத்தில் என் மகளின் கையில் எழும்பு முறிவு காயம் ஏற்பட்டது. இது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தியது. தற்போது உடல்நலம் தேறி வருகிறார்'' என்றார்.