மலையேறிய சந்நியாசி மாயம்: ஈஷா கிளப்பிய புதுப் புகார்

மலையேறிய சந்நியாசி மாயம்: ஈஷா கிளப்பிய புதுப் புகார்
மலையேறிய சந்நியாசி மாயம்: ஈஷா கிளப்பிய புதுப் புகார்

ஈஷாவில் தன்னார்வலராக செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்க வைக்கப்படுகின்றனர்

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பூண்டி பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோகா மையம். இதன் நிறுவனரான ஜக்கி வாசுதேவும், இந்த மையமும் அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். 
பொதுவாக ஈஷா மீது வெளியிலிருந்துதான் புகார் கிளம்பும். ஆனால், நேற்று ஈஷாவுக்கு உள்ளிருந்தே ஒரு புகார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. அது ‘ஆள் காணவில்லை’எனும் புகார். அதாவது தென்காசி மாவட்டம், குரும்பலாசேரியை சேர்ந்தவர் கணேசன். 45 வயதான இவர் கடந்த 2007ம் ஆண்டில் ஈஷாவில் தன்னார்வலராக இணைந்துள்ளார். பின் அதன் தீவிர பக்தரானவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரம்மச்சரியம் பெற்றார். தனது பெயரை ‘பவதுத்தா’என்று மாற்றிக் கொண்டுள்ளார். ஈஷாவுக்கு மேற்புறம் இருக்கும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டு தோறும் இவர் ஏறிச்சென்று சுயம்பு லிங்கத்தை வணங்கிவிட்டு வருவது வழக்கமாம்.
இந்த ஆண்டும் அப்படிச் சென்றவர் கடந்த 5 நாட்களாகியும் திரும்பி வரவில்லை. இதனால், ஈஷா யோகா மையம் சார்பில் சம்பந்தப்பட்ட லிமிட்டை சேர்ந்த ஆலாந்துறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீஸார் விசாரணையை துவக்கியுள்ளனர். ஈஷாவில் தன்னார்வலராகச் செல்பவர்கள் அங்கேயே நிரந்தரமாகத் தங்க வைக்கப்படுகின்றனர். கட்டாய சந்நியாசம் தரப்படுகிறது என்றெல்லாம் சில விமர்சனங்கள் ஏற்கனவே வெடித்துள்ளன. இவற்றை ஈஷாவும் ஆதாரத்துடன் மறுத்துள்ளது. இந்நிலையில், கணேசன் என்கிற பவதுத்தா காணாமல் போயுள்ள விவகாரம் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.
-எஸ்.ஷக்தி

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com