வட மாநில தொழிலாளர்கள் ஒரே நேரத்தில் குடும்பத்துடன் கூட்டமாகக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் ஒரேநேரத்தில் குடும்பத்துடன் கூட்டமாகக் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக வடமாநில தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற தகவல் பரவி வருகிறது. அவ்வாறு வதந்தி பரப்பிய 3 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவர்களைக் கைது செய்வதற்காக தனிப்படை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுதொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குழு ஒன்றும் ஆய்வு நடத்த வருவதாகத் தகவல் வெளியானது. இதுதொடர்பாக, இன்று தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ' வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திபரப்புவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள்' என்று குறிப்பிட்டார்.
அதேநேரம், தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை எனக் கூறி வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெளியேறுவதாக வதந்தி ஒன்றும் பரவியது. குறிப்பாக, தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டமாகக் குவிந்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையிலான போலீஸார், வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் விசாரணையின்போது பதில் அளித்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிலர், 'மார்ச் 8 ஆம் தேதி ஹோலி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்குச் செல்ல இருக்கிறோம்' எனத் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.