தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆபத்தா? - என்ன நடக்கிறது?

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆபத்தா? - என்ன நடக்கிறது?
தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆபத்தா? - என்ன நடக்கிறது?

'வடமாநிலத் தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு சட்டரீதியாகத் தேவையான உதவிகளைச் செய்யும்'

தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு வருவதாக வரும் தகவல்களை அடுத்து, உண்மை நிலையை ஆராய பீகாரில் இருந்து 4 பேர் கொண்ட குழு ஒன்று வரவுள்ளதாக வெளியான தகவல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான ஹோட்டல், தங்கும் விடுதிகள், பெரு நிறுவனங்கள், மளிகைக் கடை, வாகனம் பழுதுபார்க்கும் கடை, பேருந்து கட்டும் நிறுவனம், கொசுவலை தயாரிப்பு கம்பெனி, பின்னலாடை தொழில் மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் நிறுவனம் என திரும்பிய திசை எல்லாம் வடமாநிலத் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 
குறிப்பாக, 18 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். அதுவும், கொங்கு மண்டலம் என சொல்லப்படும், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் அதிகளவில் வேலை செய்து வருகின்றனர். 
காரணம், தங்கள் மாநிலத்தைவிட தமிழ்நாட்டில் அதிக சம்பளம் கிடைப்பதால் அவர்கள் இங்கு வருகின்றனர். இதனால், தமிழகத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவருவதாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத் தொழிலாளர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியது. ஆனால், அவரை யாரும் அடித்துக்கொலை செய்யவில்லை. அவர் ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் தவறி விழுந்து விபத்தில் மரணமடைந்தார் என காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் விளக்கம் அளித்தது. 
மேலும், வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால், தமிழ்நாடு வடமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவியது. பதட்டமும் ஏற்பட்டது.
இதனிடையே, இந்த விவகாரம் பீகார் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. பா.ஜ.க. எம்.எல்.ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது, சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி, 'தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாள் அழைப்பை ஏற்று பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சென்னை சென்று வந்தது முதல் இந்த விவகாரம் திட்டமிட்டு பரப்பப்படுகிறது' என்று குற்றம் சாட்டினார். 
இந்நிலையில், தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் உள்ள தொழில் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அமைதியான சூழலில் பணியாற்றி வளர்ச்சிக்கு துணையாக உள்ளனர். அவர்களை தமிழக மக்கள் நேசக்கரம் கொண்டு வரவேற்று வருகின்றனர். மேலும், அரசின் தொழிலாளர் நலச்சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் மூலம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது' என்றார். 
மேலும், 'சமூக வலைதளங்களில் உள்நோக்கத்தோடு, தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பப்படுகிறது. தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் அச்சமின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்குத் தமிழக அரசு சட்டரீதியாகத் தேவையான உதவிகளைச் செய்யும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு காவல்துறை தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. 0421-2203313 என்ற தொலைபேசி எண்ணிலும் 94981 01300 மற்றும்  94981 01320 ஆகிய செல்போன் எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் ஏ.டி.எஸ்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் தெரிவித்துள்ளார். 
மேலும், தமிழ்நாட்டில் வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான செய்தியில் எந்தளவு உண்மை உள்ளது என்பதை ஆராய பீகாரில் இருந்து 4 பேர் கொண்ட குழு இன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவினர் தமிழ்நாட்டில் பிரச்னைக்குரிய பகுதியில் ஆய்வு செய்ய உள்ளனர்.
'வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் வரையில் தண்டனை விதிக்கப்படும்' என தமிழ்நாடு காவல்துறை கடுமையாக எச்சரித்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.  

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com