டிக்கெட் எடுக்காமல் சென்ற வடமாநிலத் தொழிலாளர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்!
திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூர் சென்ற ரயிலில், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், முன்பதிவு செய்தவர்களுக்கு இடம் அளிக்காமல் 300 வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்திருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்
திருவனந்தபுரத்திலிருந்து கோரக்பூர் வரை செல்லும் ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அமர்ந்துள்ளனர்.முன்பதிவு செய்த பயணிகள் ரயிலில் ஏற வந்த போது அதிர்ச்சியடைந்து ரயிலில் உள்ள அபாயச் சங்கிலியை இழுத்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் டிக்கெட் எடுக்காமல் 300க்கும் மேற்பட்ட வட மாநிலத்தைச் சேர்த்தவர்கள் முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கைகளில் அமர்ந்திருந்தது தெரியவந்தது.
அனைவரையும் ரயிலிலிருந்து இறக்கி விட்டு ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், வடமாநிலத் தொழிலாளர்கள் டிக்கெட் எடுக்காமல் வந்ததும்,கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஹோலி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊருக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. ரயில்வே போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பிவைத்தனர். இச்சம்பவத்தால் ரயில் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.