மரணங்கள் அதிகரித்தும் குறையாத ஆன்லைன் ரம்மி மோகம் - பின்னணி என்ன?

மரணங்கள் அதிகரித்தும் குறையாத ஆன்லைன் ரம்மி மோகம் - பின்னணி என்ன?
மரணங்கள் அதிகரித்தும் குறையாத ஆன்லைன் ரம்மி மோகம் - பின்னணி என்ன?

'ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க நடவடிக்கை தேவை'

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால், வினோத்குமார் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தமிழ்நாட்டில் மட்டும் நிகழ்ந்த 44வது மரணம் ஆகும்.
தமிழ்நாடு மட்டுமல்லாது, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு ஏராளமானோர் அடிமையாகி பெரும் பணத்தை இழந்துள்ளனர். படிக்காதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி உயர் வருவாய் வகுப்பினரும் இந்த சூதாட்டத்துக்கு தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் இழந்து வருகின்றனர். இதற்குத் தடை விதிக்கக் கோரி, சமூக ஆர்வலர்கள் மட்டுமின்றி, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆசையைத் தூண்டும் ஆன்லைன் ரம்மி
'சீக்கிரம் பணக்காரனாக வேண்டும்' என்ற எண்ணத்தில் பலர் ஆன்லைனில் இந்த சூதாட்டத்தை ஆடுகின்றனர். ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான செயலிகள் அனைத்துமே முதலில் விளையாடுபவர்களுக்கு சிறுசிறு வெற்றியை அளிக்கும். அதில் மயங்கிய பின்னர், அவர்கள் தொடர்ந்து விளையாடும்போது பெருமளவிலான பணத்தை இழந்துவிடுகின்றனர். 
அவ்வாறு இழந்த பணத்தை மீண்டும் பிடிக்கும் நோக்கில், சூதாட்டத்துக்கு அடிமையாகும் அப்பாவி மக்கள் இறுதியில் தங்கள் உயிரையும் இழந்து விடுகின்றனர். இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 44 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.  
இந்தியாவில் 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகள்(app) உள்ளன. இவற்றை சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தி, பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை ஈட்டுகின்றன. இந்தத் தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்து அவசரச் சட்டம் கொண்டு வந்தது. 
இந்த தடைச் சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. வழக்கு விசாரணையில், 'ஆன்லைன் ரம்மி என்பது திறன் சார்ந்த விளையாட்டு, சூதாட்டம் அல்ல என்று வாதிடப்பட்டதை ஏற்ற நீதிமன்றம், விளையாட்டுகளைத்தடை செய்ய முடியாது. முறைப்படுத்தவே இயலும்' என்று கூறி சூதாட்டத் தடைச் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. 
நீதியரசர் சந்துரு குழு
இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் 10 ஆம் தேதி ஆன்லைன் விளையாட்டுகளைக் கட்டுப்படுத்தவும் அரசுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்தது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சந்துரு குழு பரிந்துரைத்தது.
இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. அந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் மரணங்கள் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வலுக்கும் கோரிக்கை 
மேலும், 'ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்' என மின்னணு - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி அளித்துள்ளார்.
ஆன்லைன்  விளம்பரங்களை பார்த்துவிட்டு பலர் தவறான வழிக்கு சென்று உயிரை மாய்த்துக் கொள்வதாக வேதனை தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், பணத்தை இழந்த மன உளைச்சலில் பலர் தற்கொலை செய்து கொள்வதாகவும், ஆன்லைன் தடைச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com