மார்ச் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை மார்ச் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தவரும், தமிழகத்தில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளருமான ஹரி நாடாரைப் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு குற்ற வழக்கில் கடந்த 2021 மே மாதம் கைது செய்து பெங்களூர் பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில் அடைத்தனர்.
அப்போது கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழிலதிபர் ஹரி நாடார் மீது மோசடி புகார் ஒன்றைத் தமிழக காவல்துறையினரிடம் வழங்கியிருந்தார்.
மோசடி புகார் அளித்து 22 மாதங்கள் கடந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) ஆய்வாளர் பிரசித் தீபா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் கடந்த 22 மாதங்களாக விசாரணை கைதியாகச் சிறையில் இருந்து வரும் ஹரி நாடாரைப் பிப்ரவரி 27 அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் கைது செய்தார்கள்.
இந்நிலையில் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரைச் சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ரேவதி, மார்ச் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஹரிநாடாரை காவல்துறையினர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு அழைத்துச் சென்றனர்.