'இனி எந்த அவகாசமும் வழங்க முடியாது' - கோவை செங்கல் சூளை வழக்கில் அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்

'இனி எந்த அவகாசமும் வழங்க முடியாது' - கோவை செங்கல் சூளை வழக்கில் அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்
'இனி எந்த அவகாசமும் வழங்க முடியாது' - கோவை செங்கல் சூளை வழக்கில் அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்

மூடப்பட்ட சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க நீதிபதிகள் உத்தரவு

'கோவையில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை நாளைக்குள் (மார்ச்  3) துண்டிக்க வேண்டும்' என தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களை பாதுகாப்பது, மேற்குத் தொடர்ச்சி மலையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கக் கோரியது ஆகியவை தொடர்பான வழக்குகள் இன்று (மார்ச் 2) நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தன.

அப்போது, யானைகள் வழித்தடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டித்தது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த அறிக்கையில், கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 44 செங்கற்சூளைகளில், 32 சூளைகளுக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் மீதமுள்ள சூளைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 118 செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகவும் அவற்றின் மின் இணைப்பை துண்டிக்கவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, 'மின் இணைப்பை துண்டிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஏன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'சட்ட விரோத நடவடிக்கைகளை ஊக்குவிக்க கூடாது, ஆதரிக்க கூடாது' என அரசுத் தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், 'மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 118 செங்கற்சூளைகளின் மின் இணைப்பை துண்டிக்கக் கூறியுள்ள நிலையில், 44 சூளைகள் மட்டும் சட்டவிரோதமாக செயல்படுகிறது என எப்படிக் கூற முடியும்?' எனவும் நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதற்கு அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'மீதமுள்ள செங்கற்சூளைகளின் மின் இணைப்பு இரண்டு நாட்களில் துண்டிக்கப்படும்' என விளக்கமளித்தார்.

இதையடுத்து, 'நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்கின்றன. இந்த விவகாரத்தில் அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை' என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, 118 சட்டவிரோத செங்கற்சூளைகளுக்கான மின் இணைப்பை நாளைக்குள் துண்டித்து, மார்ச் 6 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், மின்சார வாரியத் தலைவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் ' எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர். 

மேலும், 'மின் இணைப்பு துண்டிக்கப்படுவதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் உறுதி செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

கோவை தடாகம் பள்ளத்தாக்கில் மூடப்பட்ட சூளைகள் இரவில் செயல்படுவதாக மனுதாரர் தரப்பில் புகார் கூறப்பட்டதையடுத்து, மூடப்பட்ட சூளைகளின் மின் இணைப்பையும் துண்டிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்பகுதிகளில் மண் எடுக்கப்பட்டதால் ஏற்பட்ட குழிகளை மூடுவதற்கு இறுதி வாய்ப்பாக, அரசுக்கு மூன்று மாத அவகாசம் வழங்கிய நீதிபதிகள், 'மேற்கொண்டு எந்த அவகாசமும் வழங்கப்படாது' என உறுதிபடத் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com