"நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அதனை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது"
பிரபல எழுத்தாளர் கோணங்கி மீது ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ''இந்த புகாரால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அதனை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது'' என்கிறார் கோணங்கி. என்ன நடந்தது?
எழுத்தாளர் கோணங்கியிடம் தான் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து ஆராய்ச்சி மாணவர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் எனது டீன்-ஏஜ் காலகட்டத்தில் கோணங்கியை காட்பாதராக நினைத்துக் கொண்டு வாழ்ந்தேன். ஆனால், அவர் என்னை தனது பாலியல் சீண்டலுக்கு பயன்படுத்தினார். இதனால் நான் கடும் மனச்சிதைவுக்கு ஆளானேன். அதை வார்த்தைகளால் வர்ணிக்கவேமுடியாது.
கோணங்கியிடம் இருந்து எப்போது போன் அழைப்பு வந்தாலும் எனக்கு மனதில் ஒருவித பயம் தொற்றிக்கொள்ளும். இதனால் நான் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்துக்குக்கூட தள்ளப்பட்டேன். இதனால் என் வாழ்க்கையே நரகமாய் மாறிவிட்டது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்ததாக, ஷ்யாம் சுந்தர்வேல் என்பவரின் ஃபேஸ்புக் பதிவில், '2018, மே மாதத்தில் கோவில்பட்டிக்குச் சென்றேன். தமிழில் முக்கிய எழுத்தாளர் என்று தெரிந்தவர்கள் சொல்லியும், நண்பனின் பெரியப்பாவாகவும் கோணங்கி அறிமுகமாகி இருந்தார். 'உனக்கும் நான் பெரியப்பா தான்டா' என்று அவர் சொன்னதால், அவருக்கு அந்த மதிப்பை அளித்தேன்.
தனது எழுத்து வேலைகளுக்குத் தட்டச்சு செய்யவேண்டும் என்று உதவி கேட்டார். அந்தச் சந்திப்பிலிருந்து 2019 பிப்ரவரி மாதம் வரையில், வெவ்வேறு சூழ்நிலைகளில் கோணங்கியின் பாலியல் சீண்டல்களுக்கு ஆளானேன். அவை அனைத்தும் திட்டுமிட்டு கோணங்கியால் நடத்தப்பட்ட பாலியல் தாக்குதல்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
'தமது ஆளுமையினால் வசீகரிக்கப்பட்ட சிறார்களை, இளைஞர்களை பாலியல் சுரண்டல் மற்றும் வன்முறைக்கு உட்படுத்தினார் என்று எழுத்தாளர் கோணங்கியின் மீது புகார்கள் வந்துள்ளன. அதற்கு உடந்தையாக இருந்தார், கண்டு கொள்ளாமல் இருந்தார் என்று அவரது தம்பியும், நாடக இயக்குநருமான முருகபூபதி மீதும் குற்றச்சாட்டுகள் வருகின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகளைப் பலர் மெளனமாகக் கடந்து போவதையும் சிலர் எழுத்தாளருக்கு, நாடகக் கலைஞருக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் எழுதுவதையும் நாம் பார்க்கமுடிகிறது. பாதிக்கப்பட்டவரை நிராகரிக்கும் போக்கும் தென்படுகிறது. ஏன் இதுவரை அவர் பேசாமல் இப்போது பேசுகிறார் என்ற வழக்கமான தட்டிக்கழித்தலும் நடக்கிறது. மாறாக நாம் இதற்கு விரைந்து, நிதானமான, நேர்மையான வினையாற்ற வேண்டும்' என திரைத்துறையைச் சேர்ந்த அமுதன் ராமலிங்கம் புஷ்பம் என்பவர் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதேநேரம், கோணங்கிக்கு ஆதரவான குரல்களையும் சமூக வலைதளங்களில் கவனிக்க முடிகிறது. '' ஒரு இடருக்குள் ஒருவர் தள்ளப்பட்டால் நெடுங்காலமாக நாங்கள் அவருடன் தொடர்பில் இல்லை என்பது, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாங்கள் உத்தமர்கள் என கோஷமிடுவது. இதுவொரு நல்ல சூழ்நிலை அல்ல. கோணங்கி உறுதியாக இருங்கள். கலங்க வேண்டாம்'' எனப் பதிவிட்டுள்ளார், எழுத்தாளர் லக்ஷ்மி மணிவண்ணன்.
எழுத்தாளர் ஜெயமோகனும், 'கோணங்கி பொதுவில் மன்னிப்பு கோரலாம் அல்லது இன்று வந்துள்ள பொதுக்கண்டனமே பெரிய தண்டனைதான். எழுத்தாளனுக்கு அது ஓர் இறப்பு. அவரை நான் அறிந்தவரை மனமுடைந்திருப்பார் என்றே எண்ணுகிறேன். குடும்பத்தைச் சார்ந்தே செயல்படுபவர் அவர். இப்போது குடும்பச்சூழலில் இருந்து அன்னியமாகிவிடுவார். அவர் இதிலிருந்து மீண்டுவரவேண்டும். மீண்டும் அவருக்கு நண்பர்களின் ஆதரவு இருக்கவேண்டும்' என்கிறார்.
கோணங்கி மீதான புகார்களுக்கு விளக்கம் கேட்டு, குமுதம் இணைய தளத்துக்காக அவரிடமே பேசினோம். ''என் மீது ஒரு குழு திட்டமிட்டு பொய்யான புகாரைத் தெரிவித்து வருகிறது. அதற்கான காரணம் எனக்கு தற்போது வரையில் தெரியவில்லை. இந்தப் புகாரால் நான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளேன். அதனை வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது. இது திட்டமிட்டு நடத்தப்படும் சதி. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் இல்லை என்பது போல, இதனை நான் கடந்து சென்று கொண்டுள்ளேன்'' என்கிறார்.
மேலும், ''கடந்த 3 வருடங்களாக ஒரு நாவலை எழுதி வருகிறேன். அதற்கான பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். அதில்தான் என் முழு கவனமும் உள்ளது'' என்கிறார்.
-கே.என்.வடிவேல்