'கேட்டது தள்ளுவண்டிதான், கிடைத்தது உணவகம்!' - கோவை கைதியின் குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மருத்துவர்

'கேட்டது தள்ளுவண்டிதான், கிடைத்தது உணவகம்!' - கோவை கைதியின் குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மருத்துவர்
'கேட்டது தள்ளுவண்டிதான், கிடைத்தது உணவகம்!' - கோவை கைதியின் குடும்பத்துக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மருத்துவர்

'ஒரு தள்ளுவண்டி கிடைத்தால்கூட போதும், உணவகம் அமைத்துக் கொள்வேன்'

சிறையில் 16 ஆண்டுகளைக் கழித்துவிட்டு விடுதலையான கைதி ஒருவரின் வாழ்வாதாரத்துக்காக மருத்துவர் ஒருவர் உணவகத்தை அமைத்துக் கொடுத்துள்ள சம்பவம், கோவையில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த லோகேந்திரன் என்பவர், அங்குள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும்போது சக தொழிலாளி ஒருவருடன் லோகேந்திரனுக்கு மோதல் ஏற்பட்டது.  இந்த மோதலில் அந்த நபர் இறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து லோகேந்திரன் கைது செய்யப்பட்டார். 

நீதிமன்றத்தின் விசாரணையில் லோகேந்திரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 16 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் லோகேந்திரன் குடும்பம் மிகவும் சிரமப்பட்டது. கூலி வேலை செய்து மகன்களைக் காப்பாற்றி வந்துள்ளார், லோகேந்திரனின் மனைவி. 

கோவை சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் சில கைத்தொழில்களையும் லோகேந்திரன் கற்றுக் கொண்டார். இந்நிலையில் 16 வருட தண்டனைக் காலம் முடிந்த நிலையில், அண்மையில் லோகேந்திரன் விடுதலையானார். ஆனால், அடுத்து என்ன செய்வது என வழிதெரியாமல் தவித்துள்ளார். தனது குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சுயதொழிலில் ஈடுபடும் முயற்சியில் இருந்தவர், தன்னுடைய நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார். எங்கும் உரிய பதில் கிடைக்கவில்லை.  

இந்நிலையில், லோகேந்திரனின் குடும்பச் சூழலை அறிந்த கோவை, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மருத்துவர் மகேஸ்வரன் என்பவர் உதவி செய்வதற்கு முன் வந்துள்ளார். 'தனக்கு ஒரு தள்ளுவண்டி கிடைத்தால்கூட போதும், உணவகம் அமைத்துக் கொள்வேன்' என லோகேந்திரன் கூறியுள்ளார். 

ஆனால், ஆச்சர்யம் அளிக்கும்விதமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பாரதி நகர் பகுதியில் ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கு லோகேந்திரனுக்கு தேநீர் மற்றும் உணவகத்துடன் கூடிய ஓட்டல் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சம் வரையில் செலவாகியுள்ளது. 

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் பிழைப்புக்கு வழிகாட்டிய மருத்துவருக்கு லோகேந்திரனின் குடும்பம் கண்ணீரால் நன்றி சொன்ன சம்பவம், மேட்டுப்பாளையம் பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com