மஞ்சம் புல்லுக்காக கவுத்தி மலையில் மர்ம கும்பல் தீ வைப்பு!
திருவண்ணாமலையில் உள்ள கவுத்தி மலையில் 325 ஹெக்டேரில் இரும்பு தாது இருப்பதாகக் கூறப்படுகிறது.ஜிண்டால் நிறுவனம் இரும்பு தாதுவை வெட்டியெடுக்க முயன்ற போது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த நிறுவனம் பிறகு முயற்சியைக் கைவிட்டுச் சென்றது.சமூக விரோதிகள் சிலர் அடிக்கடி தீ வைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.கடந்த 10 நாட்களில் மட்டும் 7 முறை தீப்பிடித்துள்ளது. ரேகன் போக் இந்தியா தொண்டு நிறுவனத்தின் தலைமையில் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் கவுத்திமலையில் மீண்டும் தீப்பிடித்தது.3 கி.மீ தூரம் வரை பரவியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. தீயை அணைக்க தொண்டு நிறுவன ஊழியர்களும், வனத்துறையினரும், கிராம மக்களும் போராடி வருகின்றனர்.தீயினால் ஏராளமான மரம், செடி, கொடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன. மஞ்சம் புல்லுக்காக மலை மீது ஒரு கும்பல் அடிக்கடி தீ வைத்து வந்த நிலையில் அதன் தேவை குறைந்துவிட்டதால் சமூக விரோதிகள் தீவைத்து விடுவதாகக் கூறப்படுகிறது.மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.