நிகழ்ச்சி தொடர்பாக எதையும் யோசிக்காமல் நடிகர்கள் வந்தால் நான் என்ன செய்ய முடியும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா உள்பட சிலருக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கியதாக எழுந்துள்ள சர்ச்சை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு ஒன்று கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, நடிகர் கோகுல், நடன இயக்குனர் சாண்டி, ஈரோடு மகேஷ் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி அரசு முத்திரையுடன் விழா நடத்தி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், ''தனியார் நிறுவனம் நடத்திய பட்டமளிப்பு விழாவுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் அரங்கத்தை பயன்படுத்தி உள்ளனர். நிகழ்ச்சியை நடத்திய தனியார் அமைப்புக்கும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை'' என்றார்.
மேலும், ''இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவதற்குக் கடந்த நவம்பர் மாதமே அனுமதி கோரியுள்ளனர். அப்போது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகம் கடிதம் தந்ததாகக் கூறி பட்டமளிப்பு விழாவுக்கு அனுமதி கோரினர். அதனால் அனுமதி அளித்தோம். இந்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி வள்ளிநாயகத்தையும் அவர்கள் ஏமாற்றி உள்ளனர்'' என்றார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் செயலாளர் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வேல்ராஜ் தெரிவித்தார்.
போலி டாக்டர் பட்டம் சர்ச்சை தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி வள்ளிநாயகத்திடம் பேசினோம். '' நிகழ்ச்சிக்கான அனுமதி கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எனக்கு அனுப்பி வைத்தார். நான் கடிதத்தில் முன்னாள் நீதிபதி என்றும் நீதிபதிகள் அசோசியேசனின் துணைத்தலைவர் என்றும் குறிப்பிடுவேன். என்னுடைய கையெழுத்தை தமிழில் போட மாட்டேன். என் பெயரில் அந்த கடிதத்தைப் போலியாக தயார் செய்துள்ளனர். இதுதொடர்பாக என்னையும் புகார் அளிக்குமாறு அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கூறியது. அதனால் மாம்பலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்'' என்றார்.
''அதேநேரம், என்னால்தான் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தார்கள் என்பதை ஏற்க முடியாது. அப்படிப் பார்த்தால் அண்ணா பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதி என அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளனது. அதுவே தவறான செயல்'' எனக் குறிப்பிடும் வள்ளிநாயகம்.
'' ஜனவரி 5 ஆம் தேதியன்று அனுமதி கடிதம் அளித்துள்ளனர். யார் அழைத்தாலும் நான் நிகழ்ச்சிகளுக்குச் செல்வேன். டாக்டர் பட்டம் தொடர்பான விவகாரத்தில் என்ன காரணத்துக்காக இதுபோன்று செய்துள்ளார்கள் என்று தெரியவில்லை. 20 ஆண்டுகளாக நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருகிறேன். இதுபோன்ற புகார்கள் இதுவரையில் வந்ததில்லை.
நான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும் கிடையாது. நிகழ்ச்சி தொடர்பாக எதையும் யோசிக்காமல் நடிகர்கள் வந்தால் நான் என்ன செய்ய முடியும். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கூப்பிடுகிறார்களே என்றுதான் சென்றேன். இல்லையென்றால் சென்றிருக்க மாட்டேன்'' என்கிறார்.