ஹார்மோன் சிகிச்சை: ' முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு உணரவில்லை' - மருத்துவர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் புகார்

ஹார்மோன் சிகிச்சை: ' முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு உணரவில்லை' - மருத்துவர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் புகார்
ஹார்மோன் சிகிச்சை: ' முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு உணரவில்லை' - மருத்துவர்கள் முன்வைக்கும் அதிர்ச்சிப் புகார்

தலைநகரத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில்கூட எண்டோகிரைனாலஜி துறை இல்லாத அவலநிலை தொடர்கிறது

இந்தியாவிலேயே முதல் முறையாக 'மக்களை தேடி மருத்துவம்' போன்ற திட்டங்களையெல்லாம் தொடங்கி மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம் என்று பெருமையாக சொல்லிக்கொண்டாலும் டெல்லி எய்ம்ஸ், கேரளா, சண்டிகர், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ள ஹார்மோன் பிரச்சனைகளுக்கான சிறப்பு வசதி, தமிழக தலைநகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இல்லை என்ற பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. . இதுகுறித்து நாம் விசாரித்தபோது…

எண்டோகிரைனாலஜிஸ்ட்(எண்டோகிரைனாலஜிஸ்ட்) எனப்படும் நாளமில்லா சுரப்பி மருத்துவ நிபுணர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காரணம் தைராய்டு, சர்க்கரை வியாதி (இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக பாதிப்பு), ஹார்மோன் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கு எண்டோகிரைனாலஜிஸ்தான் சிகிச்சை அளிக்க உகந்தவர்.

நமது 6 விதமான சுரப்பிகள் உள்ளன. இதில், ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்வதுதான் இந்த துறை. தைராய்டு, ஆஸ்டியோபோராசிஸ் (ஆஸ்டியோபோரோசிஸ்) எனப்படும் எலும்பு சிதைவு நோய், உடல் வளர்ச்சியின்மை, பெண்களுக்கு சரியான வயது வந்தும் ஏஜ் அட்டெண்ட் பண்ணாமல் இருப்பது, பி.சி.ஓ.டி. பிரச்சனை, மார்பக வளர்ச்சியின்மை, ஆணுறுப்பு வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் எண்டோகிரைனாலஜி டாக்டர்தான் சிறப்பு சிகிச்சை அளிப்பார்கள். 

இன்று 4 பெண்களுக்கு ஒருவரை குறிவைக்கும் தைராய்டு உள்ளிட்ட வியாதிகளுக்கும்கூட எண்டோகிரைனாலஜிஸ்ட் இல்லாமல் தலைநகரில் வெறும் எம்.டி பொது மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கிறார்கள். மதுரை ராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இந்த எண்டோகிரைனாலஜி துறை உள்ளது.

ஆனால், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கே.எம்.சி. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தமிழ்நாடு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என தலைநகரத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில்கூட எண்டோகிரைனாலஜி துறை இல்லாத அவலநிலை தொடர்கிறது. இதுவே, டெல்லி எய்ம்ஸ், கேரளா, சண்டிகர், புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு மருத்துவமனைகளில் டி.எம். ஸ்பெஷாலிட்டி முடித்த எண்டோகிரைனாலஜிஸ்ட்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் தனியார் மருத்துவனைகளிலும் உள்ளனர். ஆனால், இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முன்னோடியாக இருப்பதாகக் கூறப்படும் தமிழக அரசு மருத்துவனைகளில் (மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைத் தவிர) பல ஆண்டுகளாக இந்தத் துறை இல்லை.

காரணம், பிரபல டாக்டர் விட்டல் என்பவர் சென்னை எம்.எம்.சி எனப்படும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சர்ஜிகல் எண்டோகிரைனாலஜி துறையை தொடங்கினார். அவர், ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து. இங்கு தைராய்டு, மார்பக புற்றநோய் உள்ளிட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. ஆனால், மருத்துவ எண்டோகிரைனாலஜி சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுவதில்லை” என்கிறார்கள் அதற்கான பின்னணியையும் கூறி புருவம் உயர்த்துகிறார்கள்,   

சென்னை கண்ணன், மதுரை கண்ணன் என்று அழைக்கப்பட்ட இரண்டு மருத்துவர்களை கொண்டு சென்னை ராஜிவ்காந்தி தலைமை மருத்துவமனையில் வந்த மெடிசன் ஆஃப் எண்டோக்ரைனாலஜி துறை சென்னை கண்ணன் மீதான குற்றச்சாட்டால் மூடப்பட்டது. அவரும் இறந்துவிட்டார். மதுரை கண்ணனும் தனியாரில் அதிக சம்பளம் கிடைத்ததால் ரிசைன் செய்துவிட்டு போய்விட்டார். இதனால், தினமும் தைராய்டு, கருத்தரிப்பு, ஹார்மோன் பிரச்சனைகளுடன் வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து, சர்க்கரை வியாதி நிபுணரும் பொது மருத்துவருமான கருணாநிதி, “இந்தியாவிலேயே தசை மூட்டு பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் டி.எம்.ருமட்டாலஜி, முதியோர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் எம்.டி ஜீரியாட்ரிக்ஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு முதன் முதலில் எம்.எம்.சி. அப்படியிருக்க, பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வந்துபோகும் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எண்டோகிரைனாலஜி சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதும் அதற்கான மருத்துவ நிபுணர்களும் இல்லை என்பதும் அதிர்ச்சி அடையக்கூடிய தகவல். திமுக அரசு இதில் கவனம் செலுத்தி ஆரம்பக்கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட மருத்துவக்கல்லூரிகளாவது இந்த எண்டோகிரைநாகலிஸ்ட் துறையை தொடங்கவேண்டும். எம்.எம்.சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு எண்டோகிரைனாலஜி டாக்டர் மட்டும்தான் சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பை படித்து வருகிறார்கள். ஆனால், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரே ஒரு எண்டோகிரைனாலஜி ஸ்பெஷலிஸ்ட்டும் இப்போது அங்கு பணிபுரியவில்லை. இப்போதைக்கு, மத்திய அரசு மருத்துவமனைகளில் இருந்து தனியார் மருத்துவமனைகளில் இருந்து எண்டோகிரைனாலஜி பேராசிரியரை கொண்டுவந்து பாடம் நடத்தலாம்” என்று ஆலோசனை கூறுகிறார்.

மேலும், இந்த சிறப்பு சிகிச்சையின் அவசியம் குறித்து பேசும் மருத்துவர் நம்மிடம், “இந்த சிகிச்சையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு உணரவில்லை. பலர் தைராய்டு பிரச்சனைகளுக்கு மட்டுமே எண்டோகிரைனலிஸ்ட் டாக்டர் சிகிச்சை அளிப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில், சர்க்கரை வியாதிக்கு சிகிச்சை அளிக்க உகந்தவர்கள் டயபட்டாலிஜிஸ்ட் (சர்க்கரை வியாதி நிபுணர்கள்) அல்ல, எண்டோகிரைனாலஜிஸ்ட்கள்தான். வேறு மாநிலங்களில் டயபட்டாலஜிக்கு என தனி துறைகள் கிடையாது. தமிழகத்தில் 4 பிரபல தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இவர்கள், சர்க்கரை வியாதிக்கு டயபட்டாலிஜிஸ்ட் என்று பேசி தனி துறையாக மாற்றிவிட்டார்கள். உண்மையில் 'Endocrinology, Diabetes & Metabolism' என்பது ஒரே துறைதான். 

ஒரு துறை என்றால் அதற்கு ஒரு ஹெச்.ஓ.டி பேராசிரியர் இருக்கவேண்டும். இவருடன், இணை-துணை- உதவி பேராசிரியர்கள், மாணவர்கள் இருக்கவேண்டும். இது, எதுவுமே சென்னை ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உருவாக்கப்படவில்லை. எண்டோகிரைனாலஜி என்றாலே என்னவென்று தெரியாமலேயே 2 மாணவர்கள் இங்கு படித்துக்கொண்டிருப்பார்கள். வருங்காலத்தில் இவர்கள்தான் தமிழக அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்போகிறார்கள். இவர்கள் எப்படி சொல்லிக்கொடுப்பார்கள்? இங்கு, சிகிச்சைக்கு வரும் ஏழை எளிய மக்களின் நிலைமையை யோசித்துப்பாருங்கள்” என்கிறார்கள். 

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குனர்(பொறுப்பு) டாக்டர் சாந்திமலரை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, ​​“இதுகுறித்து அரசின் கொண்டு செல்லப்படும்” என்றார்.

வீடுதேடி வரும் மருத்துவத் திட்டத்தை தொடங்கிய முதல்வர், மருத்துவமனையை தேடி வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுப்பாரா?

-மனோ செளந்தர்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com