பான் இண்டியா பாலியல் புரோக்கர்! -சுற்றி வளைத்த போலீஸ்... காப்பாற்றிய திமிங்கலங்கள்!

பான் இண்டியா பாலியல் புரோக்கர்! -சுற்றி வளைத்த போலீஸ்... காப்பாற்றிய திமிங்கலங்கள்!
பான் இண்டியா பாலியல் புரோக்கர்! -சுற்றி வளைத்த போலீஸ்... காப்பாற்றிய திமிங்கலங்கள்!

ஒரு டீலில் மட்டும் இந்த பார்ட்டி சம்பாதித்தது அரைக் கோடியைத் தாண்டும் என்கிறார்கள்!

சென்னையின் முக்கியமான ஸ்டார் ஓட்டல்களில் இம்போர்டட் ஜாகுவார் காரில் வந்திறங்குவார், அந்த வி.வி.ஐ.பி. அதே காரிலேயோ அல்லது பின்னால் வரும் இன்னொரு காரிலோ அந்த நடிகை இறங்குவார். இருவரும் கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்துதான் ஓட்டலுக்குள் நுழைவார்கள். அந்த நபருக்கும் நடிகைக்கும், ஓட்டல் வாசல் செக்யூரிட்டி தொடங்கி ரிசப்ஷன் வரை சல்யூட்கள் தூள் பறக்கும்.

அந்த நபர் ரிசப்ஷனிலேயே அமர்ந்துகொள்ள, தனக்கு வாட்ஸ் ஆப் பண்ணப்பட்ட ரூம் அறைக்குள் நடிகை பூனைபோலச் சென்று புகுந்துகொள்வார். இன்னும் சில நிமிடங்களில் அடுத்த பெண்மணி வருவார். அவருக்கு ஓர் அறை எண்ணை அந்த நபர் வாட்ஸ் ஆப் பண்ண, அவர் அந்த அறைக்குள் அடைக்கலமாகிவிடுவார். அடுத்து இன்னொரு கல்லூரி மாணவி வருவார். அவருக்கும் ஓர் அறை அலாட் செய்யப்படும்!

இந்த சில நிமிடங்களில், அந்த நபரின் அக்கவுன்ட்டுக்குக் குறைந்தது ஏழெட்டு லட்சங்-களேனும் கிரெடிட் ஆகியிருக்கும். சமாசாரத்தை மிகச் சுலபமாக யூகித்திருப்பீர்கள். யெஸ்...திரைத்துறையில் எப்போதும் நடக்கும் சூடான பிசினஸேதான்.

இந்த ஸ்டோரியின் மெயின் கேரக்டரின் பெயர் போஸ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சுமார் 5 வருடங்களுக்கு முன் ஒருவேளைச் சோற்றுக்கு வழியில்லாமல், சென்னைக்கு வந்தவர். மாடல் கோ ஆர்டினேட்டர் என்ற பெயரில் பல கூடல்களுக்கு ஏற்பாடு செய்து, இன்று பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்.

‘எக்ஸுக்கு நீங்கன்னா உசுரு. ரொம்ப ஏங்குறார்’ என்று ஒய்யிடம் சொல்வார். ‘ஒய் உங்களுக்காக உருகிக்கிட்டு இருக்கு’ என்று எக்ஸிடம் சொல்வார். ஒரு சுபயோக சுப தினத்தில் ஸ்டார் ஓட்டலில் இருவரது சங்கமத்துக்கு ஏற்பாடுசெய்து, சந்தில் சிந்து பாடி-விடுவார். அதாவது, ‘தில்லானா மோகனாம்பாள்’ வைத்தி கேரக்டரின் அப்டேட்டட் வெர்ஷன். இனி, ஒரு சௌகர்யம் கருதி, அவர் பெயரை ‘வைத்தி 2.0’ என்று வைத்துக் கொள்வோம்.

நடிகைகளை மூலதனமாக வைத்து பாலியல் தொழில் புரோக்கராகச் செயல்படும் எவ்வளவோ பேரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். அவர்கள் கைகட்டி, வாய்பொத்தி கற்றுக்கொள்ள வேண்டிய அளவுக்கு, அல்ட்ரா மாடர்னானவர் இந்த வைத்தி.

தனக்கு அழைப்பு இருக்கிறதோ இல்லையோ, அனைத்து சினிமா நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் ஆஜராகிவிடுவார். அங்கே தனது கிளையன்டாக இல்லாத புதுமுகங்களிடம், தன்னை சற்றும் தயக்கமின்றி அறிமுகம் செய்துகொள்பவர், தமிழ் சினிமாவில் தனக்கு நெருக்கமாக இல்லாத தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ ஒருவர்கூட இல்லை என்பார். கொஞ்சமும் கேப் விடாமல் தனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை அவர் காட்டத் துவங்கும்போது, பார்க்கிறவர்கள் திகைத்துப்போகும் அளவுக்கு அஜித், விஜய் தொடங்கி, நயன்தாரா, த்ரிஷா, சமந்தா வழியாக அத்தனை வி.வி.வி.ஐ.பிக்கள் அவரது தோளில் கைபோட்டு, இடுப்பில் கைபோட்டு நெருக்கமாக போஸ் கொடுத்திருப்பார்கள்.

இதில் அண்டை மாநிலத்து நடிகைகளும் விதிவிலக்கல்ல. சிம்பிளாகச் சொன்னால் இவர் ஒரு பான் இண்டியா பாலியல் புரோக்கர். இவரது சாமர்த்தியமே ஒரு லிங்க்கை வைத்து அடுத்தடுத்த லிங்க்குகளை தன்னிடம் குவித்து வைத்துக்கொள்வது. அம்மாவை வைத்து மகளைப் பிடிப்பார். அந்த மகளை வைத்து அவரின் தோழியைத் தொடுப்பார்.

உதாரணத்துக்கு... ஓர் இரண்டெழுத்து, மெகா மெகா பட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி, சில மாதங்களுக்கு முன்பு ஒரு நடிகைக்காக வைத்தியை அப்ரோச் பண்ணுகிறார். அவருக்கு அந்த நடிகையை சப்ளை செய்யும் வைத்தி, அந்த நபரிடம் ‘உங்க புரொடியூசர் நம்பர் கொடுங்க’ என்று கேட்க, அவர் கொந்தளிப்பாகி தர மறுத்துவிடுகிறார். வைத்தி என்ன இதுக்கெல்லாம் அசந்து போகிறவரா? அதிகாரி ஃபுல் மப்பில் இருக்கும் நேரமாகப் பார்த்து, அந்த நடிகை மூலமாக, ஸ்ட்ரெயிட்டாக, வெளிநாட்டில் இருக்கும், நிறுவன முதலாளியின் எண்ணை வாங்கி, நிர்வாகியிடம் நம்பர் வாங்கியதாக, தன்னை நேரடியாக அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

அப்படி அறிமுகமாகும்போது, அந்தத் தயாரிப்பாளர், “இவ்வளவு நடிகைகள் உன் கைவசம் இருக்காங்கன்னு சொல்றது நம்புற மாதிரி இல்லையே தம்பி. அது உண்மைன்னா, இன்னும் ஒரு வாரத்துல என்னோட பிறந்தநாள் வருது. என் முக்கியமான நண்பர்கள் 30 பேருக்கு உன்னால வெரைட்டியா சப்ளை பண்ண முடியுமா?’’ என்று கேட்க, தன்னிடம் இருக்கும் தொடர்புகளை இவர் புட்டுப்புட்டு வைக்க, எதிர்முனைப் பார்ட்டி அதிர்ந்தே போய்விட்டாராம்.

அதன்படியே, வெளிநாட்டில் நடந்த அந்த பிறந்தநாள் பார்ட்டிக்குத் தனி விமானம் நிறைய நடிகைகள், மாடல்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த ஒரு டீலில் மட்டும் இந்த பார்ட்டி சம்பாதித்தது அரைக் கோடியைத் தாண்டும் என்கிறார்கள்!

இப்படித் தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல நடிகர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், காவல்துறையினர் என மெகா நெட்வொர்க் வைத்திருந்தவர், இந்த வைத்தி. தனது வருமானத்தில் ஒரு பகுதியை இந்தக் கருப்பு ஆடுகளுக்குத் தீனியாக அனுப்பி வந்ததால், தொழிலுக்கு எவ்வித இடையூறுமின்றி நாலுகால் பாய்ச்சலில் முன்னேறி வந்தார்.

பொதுவாக, சினிமாப் பார்ட்டிகளுக்குக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது 25 பர்சன்ட் கமிஷனாகப் பெற்றுக்கொள்ளும் இவர், அரசியல்வாதிகளுக்கு அனுப்பும்போது, ரேட்டையும் டபுளாக்கி, தனது கமிஷன் 50/50 என்பதில் கறாராக இருப்பாராம். ‘அவங்களோடது உழைச்சுச் சம்பாதிக்காம, கொள்ளையடிச்ச காசு. அதனால 50/50’ என்பது இந்த பயங்கர உழைப்பாளியின் ஸ்டேட்மென்ட்.

வைத்தியின் பல ப்ளஸ் பாயின்ட்களில் ஒன்று, அவர் பாவம் எப்போதுதான் தூங்குவாரோ தெரியாது, 24 மணி நேரமும், ஏதாவது ஒரு ஸ்டார் ஓட்டலில் சஞ்சாரம் செய்தபடி, கஸ்டமர்களின் தொடர்பு எல்லைக்கு உள்ளேயே இருப்பார்.

அவரது மைனஸ் பாயின்ட்டுகளில் ஒன்று, நடிக்க வாய்ப்பு தேடுபவர்களில் சிலர் ‘அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு’ தயாராக இல்லாத நிலையிலும், அவர்களை பிளாக் மெயில் செய்து இரையாக்குவது.

இப்படி, நடிக்க மட்டுமே ஆர்வம் கொண்டிருந்த, அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு விருப்பப்படாத ஒரு பெண், பெங்களூரைச் சேர்ந்த கீத்து [பெயர் மாற்றப்பட்டுள்ளது]. எல்லோரையும்போல் வைத்தியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பார்த்து மிரண்டுபோன கீது, அவரைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஓர் இயக்குநரின் பெயரைச் சொல்லி, அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தரமுடியுமா? என்று கேட்கிறார்.

தொடக்க உரையாடல்களில், கீத்து வைத்தியின் வலைக்குள் சிக்காமல் நழுவவே, அவரை வைத்து மிக கிளாமராக ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தும் வைத்தி, அந்தப் படங்களை வைத்தே அவரை பிளாக் மெயில் செய்யத் துவங்குகிறார். ஒரு கட்டத்தில் வைத்தி தனது குரலை உயர்த்தி, ‘படுக்கலைன்னா நீ நடிக்க முடியாது’ என்று கத்தவே டென்ஷனான கீத்து பெங்களூரு காவல் நிலையம் ஒன்றில் புகார் கொடுக்கிறார்.

தன்னிடம், அத்துமீறிப் பேசியதால் காவல்துறையில் புகார் செய்யப்போவதாக கீத்து சொல்ல, தன்னை மன்னித்துவிடும்படி, வைத்தி கெஞ்சும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிவரவே, அவரது பார்ட்டிகள் எல்லாம் படுபயங்கர அப்செட்.

வைத்தியின் கெஞ்சலையும் மீறி, கீத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடவே, சரி, ஏதோ, சாதா சோதா புரோக்கராக இருக்கும். விபசாரத் தடுப்புப் பிரிவு செக்ஷன்களில் ஏதாவது ஒன்றில் போட்டுவிடலாம் என்று உடனே வைத்தியைக் கைது செய்திருக்கிறார்கள். அவர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அடுத்த சில நிமிடங்களில், சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் தொடர்ந்து அழுத்தங்கள் வரவே, மிரண்டுபோன காவல்துறையினர் வந்த சுவடு தெரியாமல், ராஜ மரியாதையுடன் வைத்தியை வழி அனுப்பிவிட்டார்கள். கோலிவுட், மல்லுவுட், டோலிவுட் என தென்னகத்து மொத்த திரைத்துறையிலும் டாக் ஆஃப் தி ஷோ இதுதான்!                  

-முத்துராமலிங்கன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com