தனது ஒரே மகனை இழந்த தாய் காஞ்சனா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது
வேலூர் மாநகருக்குட்பட்ட சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் காஞ்சனா, தனியார் காலணி தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது ஒரே மகனான ஆனந்தை சிறு வயது முதலே மிகுந்த பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். அதே அளவுக்கு ஆனந்த்தும் தாய் காஞ்சனா மீது பாசத்தோடு இருந்துள்ளார்.
இந்நிலையில், கார் ஓட்டுநராக வேலை செய்து வரும் ஆனந்த் ஒரு தீவிர அஜித் ரசிகர், அதே சமயம் நீண்ட தூர பைக் (ரைடு) பயணத்தை மேற்கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் திருச்சிக்கு நண்பர்களுடன் குழுவாக பைக் பயணம் சென்றபோது கடந்த 24.02.2023 அன்று திருச்சி அருகே விபத்து ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அன்று முதல் தனது ஒரே மகனை இழந்த தாய் காஞ்சனா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை காட்பாடி இரயில் நிலையத்தில் இரண்டாம் நடைமேடையில் அமர்ந்திருந்த காஞ்சனா திடீரென ஓடும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனையடுத்து அவரது உடலை மீட்ட காட்பாடி ரயில்வே காவல்துறையினர் அடுக்கம் பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிருக்கு உயிராக வாழ்ந்துவந்த மகன் மற்றும் தாய் உயிரிழந்த சம்பவம் வேலூரில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.