அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!

அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!
அரசுத்துறையில் 70 சதவீத போலி மனநல ஆலோசகர்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்!

போலீஸில் புகார் கொடுக்கலாம். ஆனால், போலீஸாரின் மன அழுத்தத்தை போக்க அரசால் நியமிக்கப்பட்ட உளவியல் நிபுணர்களும் போலிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்

தமிழக அரசுத்துறைகளில் நியமிக்கப்பட்ட 70 சதவீத மனநல ஆலோசகர்கள் தகுதியற்றவர்களாகவும் போலிகளாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அரசுத்துறையிலேயே போலிகளா? என்று நாம் விசாரிக்க ஆரம்பித்தபோது காவல்துறையினரின் மன அழுத்தங்களை போக்கும் உளவியல் கவுன்சிலிங், குடும்பநல நீதிமன்றங்களில் விவாகரத்து கவுன்சிலிங்,  மாணவர்களின் மன அழுத்தங்களை போக்கி கற்றல் திறனை மேம்படுத்த கல்விக்கூடங்களில் கவுன்சிலிங், இளம் வயது குற்றங்களைத் தடுக்க சிறார் கூர்நோக்கு இல்லங்களில் கவுன்சிலிங், மாவட்ட மனநல மையங்கள், இண்டர்நெட் அடிக்‌ஷன் க்ளினிக், மறுவாழ்வு மையங்கள் என பல்வேறு துறைகளில் உளவியல் நிபுணர்கள் எனப்படும் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நியமனங்களில்தான் பெரும்பாலும் போலியான, தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மேலும் எம்.ஆர்.பி எனப்படும் மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியத்தின் மூலம் பணி அமர்த்தப்படாமல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தனியார் ஏஜன்சிகள், மருத்துவக்கல்லூரி டீன்கள் மூலமாக 3 லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாய்வரை லஞ்சம் கொடுத்து இந்த அரசு வேலையில் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நாம் மேலும் விசாரிக்க ஆரம்பித்தபோது…

மனநல மருத்துவர்? மனநல ஆலோசகர்?

முதலில், மனநல மருத்துவர்கள் யார்? மனநல ஆலோசர்கள் யார் என்பதை புரிந்துகொண்டால்தான் இதில் நடக்கும் முறைகேடுகளையும் புரிந்துகொள்ளமுடியும்.

எம்.பி.பி.எஸ் முடித்து எம்.டி. மனநல மருத்துவம் படித்தவர்கள் சைக்கியாட்ரிஸ்ட் எனப்படும் மனநல மருத்துவர்கள். இவர்கள், மன நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் மூலம் சிகிச்சை அளிப்பார்கள். சைக்காலஜிஸ்ட் எனப்படும் மன நல ஆலோசகர்கள் மருந்து,  மாத்திரைகள் கொடுத்து சிகிச்சை அளிப்பதில்லை; அப்படி சிகிச்சை அளிக்கவும் கூடாது.  கவுன்சிலிங் எனப்படும் உளவியல் ஆலோசனைகளை  வழங்குவார்கள். இதில், மருத்துவ உளவியல் நிபுணர்கள்(Clinical Psychologist), உளவியல் (Psychologist) நிபுணர்கள் என்று இரண்டுவிதமான மனநல ஆலோசகர்கள் இருக்கிறார்கள். இந்த உளவியல் நிபுணர்கள் நியமனத்தில்தான் போலியான, தகுதியற்றவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கிளினிகல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் யார்? சைக்காலஜிஸ்ட் எனப்படும் உளவியல் நிபுணர்கள் யார்?

பி.எஸ்.சி சைக்காலஜி படித்து எம்.எஸ்.சி., எம்.பில் ரெகுலரில் படித்த கிளினிகல் சைக்காலஜிஸ்ட் எனப்படும் மருத்துவ உளவியல் நிபுணர்கள் டெல்லியிலுள்ள Rehabilitation Council of India ஆணையத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். சென்னை அயனாவரத்திலுள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குனர் தலைமையிலான மாநில மனநல ஆணையத்திலும் பதிவு செய்திருக்கவேண்டும். இவர்கள்தான், சுகாதாரத்துறையின் திட்டங்களில் பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் என்பதை (mental health care act 2018, national allied healthcare professions bill 2021)  மன நல பாதுகாப்பு சட்டங்கள் தெளிவாக சொல்கின்றன.

மருத்துவ உளவியல் நிபுணர்களின் தேவை என்ன?

சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை, மதுரை, தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தேனி ஆகிய மாவட்டங்களிலுள்ள மருத்துவக்கல்லூரிகளில் மட்டுமே தகுதியான மருத்துவ உளவியல் நிபுணர்கள் பணியாற்றிவருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை பெறுவதற்கான ஐ.க்யூ பரிசோதனைகள், மாணவர்களின் கற்றல் குறைபாடு தொடர்பான உளவியல் பரிசோதனைகள்- அதன்மூலம் அவர்களுக்கு 10 ஆம் தேர்வு எழுத சிறப்பு சலுகை மற்றும் வேலைவாய்ப்பில் சலுகைகள் பெறுவதற்கான பரிசோதனை சான்று அளித்தல், ஆறு வயது வரையுள்ள குழந்தைகளின் வளர்ச்சிக்கோளாறுகளை ஆராய்வதற்கான உளவியல் பரிசோதனைகள், கூர்நோக்கு இல்ல சிறார்களின் உளவியல் பரிசோதனைகள், மெடிக்கல் போர்டுக்கு வருகிறவர்களுக்கு உளவியல் ரீதியான சான்று அளித்தல், போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறார்கள் மற்றும் போக்சோவில் கைது செய்யப்பட்ட சிறார்கள் குறித்த அவர்களின் அறிவுத்திறன், மனநிலையை ஆராய்ந்து நீதிமன்றத்துக்கு அறிக்கை கொடுப்பது, குற்றங்களை செய்த சிறார்களுக்கு பெயில் வாங்குவதற்கு சான்று அளித்தல், மனநலம் பாதிக்கப்பட்டவரா இல்லையா? என்ற சான்று, பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சிறப்புக்குழந்தைகளின் நிலையை நீதிமன்றங்களில் எடுத்துக் கூறுவது,  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மனநல ஆலோசனைகள் வழங்குவது, குடும்ப நல ஆலோசனைகள், பெற்றோர் குழந்தைகளுக்கான ஆலோசனைகள், விபத்தில் தலை அடிபட்டு வரக்கூடிய நோயாளிகள் குணமானபிறகு அவர்களது அறிவுத்திறன் சார்ந்த குறைபாடுகளை அளவிட்டு இன்சூரன்ஸ் பெறுவதற்கு சான்று அளித்தல், கிரிமினல்களின் உளவியல் பாதிப்புகளை  கண்டறிந்து சான்று அளித்தல், குடும்ப நல நீதிமன்றங்களிலிருந்து விவாகரத்து தொடர்பாக வரும் தம்பதியர்களுக்கு சான்று மற்றும் ஆலோசனைகள் வழங்குவது உள்ளிட்ட பணிகளை மருத்துவ உளவியல் நிபுணர்கள் செய்துவருகிறார்கள். ஆனால், பல இடங்களில் மருத்துவ உளவியல் நிபுணர்களுக்கு பதிலாக உளவியல் நிபுணர்கள் அதுவும் தகுதியில்லாலவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதால் மேற்கண்டவற்றில் முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், மருத்துவ உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெற ஏழை எளிய நோயாளிகள் மாவட்டங்களைத் தாண்டி அலையவேண்டிய சூழல் உள்ளது.     

உதாரணத்துக்கு திருவண்ணாமலை, பெரம்பலூர், விழுப்புரம், திண்டிவனம் மாவட்டங்களிலிருந்து செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பப்படுகிறார்கள்.

சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிருந்து மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவேண்டிய நிலை.

கோயம்பத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து  சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்திற்கு வரவேண்டிய நிலை.

அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் செல்லவேண்டிய நிலை.

கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் எங்கு சென்று மருத்துவ உளவியல் ஆலோசனைகளை பெறுகிறார்கள் என்பதே கேள்விக்குறி.

இதனால், நோயாளிகளுக்கு சரியான மன ஆலோசனைகள் கிடைப்பதில்லை. தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். நேரம், பொருளாதாரம் எல்லாம் வீணடிக்கப்படுகிறது. அரசுக்கும் பணம் நஷ்டம்.

பெரும்பாலான சிறைகளிலும் ரெகுலரில் படித்த உளவியல் நிபுணர்கள் இல்லை. சிறார் கூர்நோக்கு இல்லங்களில் பணிபுரியும் (சமூக நலத்துறை மூலமாக நியமிக்கப்பட்டவர்கள்) தகுதியுள்ளவர்களாக இல்லை. சில இடங்களில் வழக்கறிஞர்களே கவுன்சிலர்களாக மாறிவிடுகிறார்கள். அதன்மூலம், வழக்குகளை எடுத்து வாதாடி இன்னொரு வருமானம் பார்க்கிறார்கள்.

18 வயதுக்குட்பட்டோர் குற்றங்கள், போக்சோ வழக்குகள்,  அதிகரித்துவருகின்றன. அவர்களுடைய மனநலத்தையும் அளவீடு செய்வதற்கு நீதிமன்றங்கள் மருத்துவ உளவியல் நிபுணர்களிடம்தான் அனுப்புகிறார்கள். பெயில்(பிணை) கொடுப்பதற்கு முன் அனுப்பி ஒப்பினியன் வாங்கிவிட்டுதான் பெயில் கொடுப்பார்கள். காவல்துறையினருக்கு உளவியல் பயிற்சி அளிப்பதிலும் தகுதியற்றவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேற்கண்டவற்றை சுட்டிக்காட்டி நம்மிடம் பேசும் பிரபல மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் வி.சுனில்குமார்,  “மருத்துவ உளவியல் நிபுணர்களைப்போல மருத்துவ ரீதியான கவுன்சிலிங்குகளை வெறும் உளவியல் நிபுணர்கள் வழங்கமுடியாது. பரிந்துரை சான்றுகளையும் வழங்கக்கூடாது. காரணம், மாநில மனநல ஆணையம் இவர்களை மருத்துவ ரீதியான உளவியல் நிபுணர்களாக அங்கீகரிக்கவில்லை. அதனால், அவர்களுக்கு மாநில மனநல ஆணையத்தில் பதிவும் லைசென்ஸும் கிடையாது. இவர்கள் குடும்ப பிரச்சனைகள், உறவு சிக்கல்கள், தொழில் சார்ந்த ஆலோசனைகள், வாழ்வியல் மேம்பாடு குறித்த கவுன்சிலிங்குகளை வழங்கலாம். இதற்குக்கூட, இவர்கள் டெல்லியிலுள்ள COUNCIL FOR ALLIED AND HEALTHCARE PROFESSIONALS  என்ற ஆணையத்தில் பதிவு செய்திருக்கவேண்டும். ஆனால், எந்த ஆணையத்திலும் பதிவு செய்து லைசென்ஸ் பெறாமல் இருப்பவர்கள், இது தொடர்பான படிப்புகளை படித்திருந்தாலும்கூட அவர்கள் போலிகள்தான்” என்கிறார் அதிரடியாக.

எங்கெல்லாம் போலியான, தகுதியற்ற உளவியல் நிபுணர்களை நியமித்திருக்கிறார்கள் என்று விசாரித்தபோது, தமிழக சுகாதாரத்துறையின் திட்டங்களான

மாவட்ட மனநலத்திட்டம் (DMHP), குழந்தைகள் நல மாவட்ட ஆரம்ப இடையீட்டு மையம் (DEIC), இணையதள அடிமை மீட்பு மையம் (Internet Addiction Clinic), முதியோருக்கான அறிவாற்றல் மறுவாழ்வு மையம் (District Cognitive Rehabilitation Center), மது போதை மீட்பு மறுவாழ்வு மையம் (Alcohol De-addiction Centre), ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மனநல சிகிச்சை மையம்(ECRC), 

உள்ளிட்ட மையங்களில் பணிகள் உருவாக்கப்பட்டதே மருத்துவ உளவியல் நிபுணர்களுக்காகத்தான். மற்ற மாநிலங்களில் இந்த பணியிடங்களில் மருத்துவ உளவியல் நிபுணர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் 60,000 ரூபாயிலிருந்து 80,000 ரூபாய் மருத்துவ உளவியல் நிபுணர்களுக்கு சம்பளம் கொடுக்கவேண்டும் என்பதால் தமிழகத்தில்  மனநல பாதுகாப்பு சட்டத்துக்கு புறம்பாக வெறும் உளவியல் நிபுணர்களை நியமித்திருக்கிறார்கள். அப்படி, நியமிக்கப்பட்ட உளவியல் நிபுணர்களைக்கூட தகுதியானவர்களாக நியமிக்கப்படவில்லை என்பதுதான் அதிர்ச்சிக்குரிய தகவல். 

அதாவது, கோவை பிரதர்ஸ் படத்தில் சத்யராஜ்- வடிவேலு  கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக கோழி புடிக்கிறவரையெல்லாம் அழைத்து வந்து கிரிக்கெட் விளையாடுவதுபோல் ஆட்கள் இல்லை என்று ஒரு காரணத்தை சொல்லி 18,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாய்வரை சம்பளம் கொடுத்து தகுதியில்லாத ஆட்களை நியமித்திருக்கிறார்கள். இதைவிட கொடுமை, டிப்ளோமா இன் ஃபார்மசி முடித்தவர், பி.எட் ஸ்பெஷல் எஜுகேஷன் படித்தவர்கள், டிஸ்டன்ஸ் எஜுகேஷனில், ஓபன் யுனிவர்சிட்டியில் படித்தவர்களைக்கூட இத்திட்டத்தில் நியமித்திருக்கிறார்கள். அதுவும், சென்னை எழும்பூர் குழந்தைகள் நலமருத்துவமனை, கே.எம்.சி. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மதுரை உசிலம்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி என பல இடங்களில் டிஸ்டன்ஸ் எஜுகேஷனில் படித்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.  இப்படி, சுமார் 120 பேர் எந்தவிதமான முறையான கல்வித்தகுதியோ துறைசார்ந்த அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

இதனால், அரசு மருத்துவமனைகளில் கவுன்சிலிங்கிற்காக வரும் ஏழை எளிய மக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து பேசிய மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் வி.சுனில்குமார்,

 “தமிழகத்தில் 34 மாவட்டங்களில் 10 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் மருத்துவ உளவியல் நிபுணர்களை நியமனம் செய்துவிட்டு அவர்களுக்கு கீழுள்ள உளவியல் நிபுணர்களையெல்லாம் பெரும்பாலும் தகுதியில்லாதவர்களை நியமித்துவிட்டார்கள்.

இப்படிப்பட்டவர்களால் நோயாளிகளுக்கு என்ன பயன் கிடைக்கும்? தேவையில்லாமல் நோயாளிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். இதனால், தனியார் மருத்துவமனைகளை நோக்கி செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நோயாளிகளுக்கு சரியான மனநல ஆலோசனைகள் கிடைப்பதில்லை. தவறான ஆலோசனைகளை வழங்குகிறார்கள். நேரம், ஏழை எளிய மக்களின் பணச்செலவு எல்லாம் வீணடிக்கப்படுகிறது. அரசு ஒதுக்கும் நிதியும் வீணடிக்கப்படுகிறது. சரியான மனநலத்தில் இருப்பவர்களுக்குக்கூட மனநலம் பாதிக்கப்பட்டதாக தவறான சான்றிதழ்களைக் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிடும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதுகுறித்து, போலீஸில் புகார் கொடுக்கலாம். ஆனால், போலீஸ்க்காரர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட உளவியல் நிபுணர்களும் தகுதியற்ற, போலியானவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் போலீஸ்க்காரர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு இல்லை” என்று குற்றஞ்சாட்டுகிறார் மருத்துவ உளவியல் நிபுணர் டாக்டர் வி. சுனில்குமார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு மருத்துவ மனநல ஆணையத்தின் தலைவர் டாக்டர் மலையப்பனிடம் பேசியபோது, “ஆரம்பத்தில், கிளினிகல் சைக்காலஜிஸ்ட்கள் பற்றாக்குறையால் சைக்கலாஜிஸ்டுகளுக்கு மூன்று மாதம் பெங்களூருவிலுள்ள நிம்ஹான்ஸ் (National Institute of Mental Health and Neurosciences)-ல் பயிற்சி அளித்து பணியமர்த்தப்பட்டார்கள். ஆனால், தொலை தூர கல்வியில் படித்தவர்களும் இதில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எங்களது மீட்டிங்கில் ஆலோசித்து அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்கிறோம்” என்றார்.

ஆனால், இப்படி பெங்களூருவிற்கு அரசு செலவில் அழைத்துசென்று பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் இப்போது அரசுப்பணியில் இல்லை. அவர்கள், அரசு செலவில் பயிற்சி எடுத்துக்கொண்டு நிம்ஹான்ஸில் பயிற்சி பெற்றவர்கள் என்று  பெருமையாக சொல்லிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளில் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவலும் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. எம்.ஃபில் சைக்காலஜி படிக்க தமிழகத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் + டொனேஷன் என 15 லட்ச ரூபாய்க்குமேல் செலவழிக்க வேண்டியிருக்கிறது. சென்னை அயனாவரத்திலுள்ள கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவக்கல்லூரி மருத்துமனைமூலம் வருடத்துக்கு 10 மாணவர்களை மட்டுமே உருவாக்குகிறார்கள். எனவே, தமிழக அரசின் 30 க்குமேற்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் இந்த படிப்பைக் கொண்டுவந்தால் ஏழை எளிய மாணவர்களும் இந்த படிப்பை படிப்பார்கள். தகுதியான மனநல ஆலோசகர்கள் ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பார்கள். தகுதியற்றவர்கள் உருவாவதை தடுக்கமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இதுகுறித்து, மாநில மன நலத்திட்டங்களின் தலைவரும் நேஷனல் ஹெல்த் மிஷன் தமிழ்நாடு இயக்குனரும் ஷில்பா பிரபாகர் ஐ.ஏ.எஸ்ஸை தொடர்புகொண்டு பேசியபோது, “தேசிய சுகாதார திட்டத்தின்படி அந்தந்த மாவட்ட சுகாதார சங்கங்களின் (district health society) மூலம் உளவியல் நிபுணர்கள் எடுக்கப்பட்டிருக்கிறார்கள். தகுதியற்ற உளவியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களா? இதில், பணி நியமனங்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார் உறுதியாக.

சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்ஸின் கவனத்திற்கு கொண்டுசென்றபோது, “நியமனங்களில் லஞ்சம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்கிறேன். எங்கெல்லாம் தகுதியற்ற நியமனங்கள் இருக்கிறது என்ற பட்டியலைக் கொடுங்கள். நாங்களும் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார் அதிரடியாக. 

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டபோது, விவரங்களை கேட்டறிந்த அவரது பி.ஏ., “அவரது கவனத்துக்கு கொண்டு செல்கிறேன்” என்றார்.

செயல்… செயல்… செயல் என செயல் வீரர்களாக செயல்படவேண்டும் என அரசுத்துறை செயலாளர்களை அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். செயல்வீரர்களாக செயல்பட்டு போலிகள் மீது நடவடிக்கை எடுத்து முத்திரை பதிப்பார்களா?

-மனோ செளந்தர்

படம்: தியாகராஜன்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com