போலி அரசு அலுவலகம்… சினிமாவையே மிஞ்சும் சீட்டிங்…சைலண்ட் போலீஸ்!

போலி அரசு அலுவலகம்… சினிமாவையே மிஞ்சும் சீட்டிங்…சைலண்ட் போலீஸ்!
போலி அரசு அலுவலகம்… சினிமாவையே மிஞ்சும் சீட்டிங்…சைலண்ட் போலீஸ்!

சம்பந்தப்பட்ட அரசு பணியாளர்களை கைது செய்யாமல் முன் ஜாமீன் வாங்கும்வரை தேடுவதுபோல் ஆக்டிங் கொடுப்பதாக குற்றச்சாட்டு

போலீஸின் வீட்டையே வாடகைக்கு எடுத்து, போலி அரசு அலுவலகம் நடத்தி இப்படியெல்லாம்கூட ஏமாற்றமுடியுமா? என்று  அதிர்ச்சிமேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது, அரசுவேலை வாங்கித் தருவதாக கூறி திருவள்ளூர் மாவட்டத்தில் 1 கோடி ரூபாய்க்குமேல் மோசடி செய்த சம்பவம். ஆனால், சம்பந்தப்பட்ட அரசு பணியாளர்களை கைது செய்யாமல் முன் ஜாமீன் வாங்கும்வரை தேடுவதுபோல் ஆக்டிங் கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  

யார் யாருக்கெல்லாம் தொடர்பு? 

போலி நியமன ஆணையில், ‘உண்மையுடனும் நேர்மையுடனும் பணிபுரியவேண்டும். எவ்வித புகார்களின்றி நியாயமாக பணிபுரியவேண்டும். மேற்கண்ட ஆணையின்படி பணிபுரியாமல் குற்றமும் புகார்கள் வந்தால் பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவீர்கள்’ என்றெல்லாம் பணி ஆணைகள் வழங்கி, ஒரிஜினல் அரசு அலுவலகத்தையே ஓவர்டேக் செய்யும் அளவுக்கு இந்த டூப்ளிகேட் அரசு அலுவலகம் ரொம்ப ஸ்ட்ரிக்டாக நடத்திவந்ததுதான் விசாரணை காக்கிகளையே விறுவிறுக்க வைத்திருக்கிறது. போலி அரசு அலுவலகம் நடத்திவந்த வசந்தகுமார் என்பவரை கைது செய்திருக்கிறது மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ். 

இவருக்கு, துணையாக இருந்த தமிழ்நாடு அரசின் சுற்றுலா மாளிகை ஊழியர் ஸ்டாலின், நகராட்சி பணியாளர் வச்சலா மற்றும் அவரது கணவர் ராஜன், தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியையின் கணவரும் ஆதிதிராவிடர் விடுதி காப்பாளருமான மோகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இந்த மோசடிக்கு துணையாக இருந்தவர்கள் யார் யார்? உயர் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் விசாரணை தொடர்ந்துகொண்டிருக்க, அடுத்தடுத்து சிக்கப்போவது யார்? என்ற படபடப்பு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மத்தியில் ஹார்ட் பீட்டை எகிறவைத்திருக்கிறது.

போலி அரசு அலுவலகம் செயல்பட்டது எப்படி? வாடகைக்கு இடம் கொடுத்த போலீஸ்க்காரருக்கு போலி அலுவலகம் நடத்தியது தெரியாதா? அரசுவேலை வாங்கித் தருவதாக 51 பேரிடம் ஏமாற்றியது எப்படி? அரசு வருவாய்த்துறை முத்திரைகளை பயன்படுத்தியது எப்படி? என்கிற கோணத்தில் நாம் விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் பல்வேறு தகவல்கள் நம்மை கிறு கிறுக்கவைக்கின்றன.  

திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியிடம் பரபரப்பு புகார் கொடுத்த டுவின் பாபுவிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, “சாதாரணமா, எங்களை  ஏமாற்றல. கவர்மெண்ட் பேரைச் சொல்லி ஏமாற்றியிருக்காங்க. கவர்ன்மெண்டையும் ஏமாற்றியிருக்காங்க. அரசு ஆர்டர் காப்பி, ஐ.டிகார்டு, ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம். எஸ்., பே ஸ்லிப், அதுக்கான பார்கோடுன்னு ஒரு அரசு ஊழியருக்கு என்னல்லாம் கொடுக்கமுடியுமோ எல்லாமே கொடுத்திருக்காங்க” என்கிறவர் ஏமாந்த பின்னணியை விவரிக்க ஆரம்பித்தபோது, அரசு அதிகாரிகளின் துணை இல்லாமல் வசந்தகுமார் இப்படி மோசடிகள் அரங்கேற்றியதற்கு வாய்ப்பே இல்லை என்பதும் உறுதியானது.  

வசந்தகுமார் வலைவீசிய ஃப்ளாஷ்பேக்…

டுவின் பாபுவும் வசந்தகுமாரும் 2013 டூ 2017 ல் மெகானிகல் எஞ்சினியரிங் ஒன்றாக படித்தவர்கள். வசந்தக்குமாரின் தங்கை திருமணத்துக்காக அழைப்பிதழ் கொடுக்க திருவள்ளூரிலிருந்து செங்குன்றத்திலுள்ள டுவின்பாபுவின் வீட்டுக்கு வருகிறார். கவர்ன்மெண்ட் வேலையில் இருப்பவர் எப்படி டிப்டாப்பாக வருவாரோ அப்படித்தான் காரில் வந்து இறங்குகிறார். “வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையில ஜூனியர் அசிஸ்டெண்டா இருக்கேன். தங்கச்சி கல்யாணத்து அவசியம் வரணும்” திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூலிருந்து இவ்வளவு தூரம் வந்து அழைப்பிதழ் கொடுத்திருக்கிறாரே என்று குடும்பத்துடன் செல்கிறார் டுவின்பாபு. அவ்வப்போது வறுமையில் தன்னிடம் பணம் கேட்கும் வசந்தக்குமார் தனது தங்கையின் திருமணத்தை இவ்வளவு ஆடம்பரமாக செய்ததைப் பார்த்து வாயடைத்துப்போகிறார் டுவின்பாபு. அரசு வேலையில் சேர்ந்து நல்லா இருக்கான் நம்ம ஃப்ரெண்டு என்று ஏக்கத்தோடு யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் வசந்தகுமாரிடமிருந்து டுவின் பாபுவிற்கு செல்பேசி அழைப்பு வருகிறது.

 “மோடி ஸ்கீம்ல இலவசமா பாத்ரூம் கட்டித்தர்றாங்க. நீயும் அப்ளை பண்ணு” என்கிறார் வசந்தகுமார்.

டுவின்பாபுவும் விண்ணப்பிக்க, வசந்தகுமார் சொன்னபடி வெரிஃபிகேஷன் வருகிறார்கள் அதிகாரிகள். இடத்தை ஆய்வுசெய்கிறார்கள். இடத்தின் பத்திரத்தை எல்லாம் பரிசோதிக்கிறார்கள். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை பதிவேட்டில் குறித்துக்கொண்டு கையெழுத்து வாங்கி செல்கிறார்கள்.

“கவர்ன்மெண்டுல வேலைபார்க்குற ஒருத்தர் நமக்கு ஃப்ரெண்டா இருக்கிறது எவ்ளோ யூஸ்ஃபுல்லா இருக்கு” என்று டுவின்பாபு உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, மீண்டும் வசந்தகுமாரிடமிருந்து அழைப்பு.

டுவின்பாபுவின் குடும்பமே  ‘அரசுவேலையில்…?   

“ஆஃபிஸுல வேக்கண்ட் இருக்குன்னு சொல்றாங்க. டெம்பரவரிதான்” என்று சொல்ல,  டி.என்.பி.எஸ்.சி தேர்வெல்லாம் எழுதி அரசு வேலைக்காக ஏக்கத்தோடு காத்திருந்த தனது மனைவியின் முயற்சி வீண்போகவில்லை என்று வானத்தில் வட்டமடிக்க ஆரம்பித்தது டுவின்பாபுவின் மனசு. ஆனால், 1 லட்ச ரூபாய் பணம் கொடுக்கவேண்டும் என்றபோது டபுள் மைண்டா இருந்த டுவின்பாபுவிடம் “மாசம் 13,000 சம்பளம் வருதுல்ல. வீட்டுல சும்மா இருக்கிறதுக்கு நான் வேலைக்கு போய்ட்டு வர்றேங்க” தனது பணி ஆர்வத்தை வெளிப்படுத்தி சம்மதிக்கவைத்தார் மனைவி.  

50,000 ரூபாய் பணம் கொடுத்து 2022 ஆகஸ்ட் மாதம் டுவின்பாபுவின் மனைவி வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறையில் வேலைக்கு சேர்க்கப்பட்டார். வேலைக்கு சென்று வர ஆரம்பித்த அண்ணியைப் பார்த்துவிட்டு, “நானும் வேலையில்லாம கஷ்டப்பட்டுக்கிட்டுத்தானே இருக்கேன்? எனக்கு அப்படியே ஒரு வேலை பாரேன்” என்று டுவின்பாபுவின் தம்பி கேட்க, டுவின்பாபு யோசித்துக்கொண்டிருந்தபோது…

“ஈக்காடு டூ தச்சூர் கூட்ரோடு கவர்ன்மெண்ட் புராஜக்ட் நடந்துக்கிட்டிருக்கு. வேலைக்கு ஆள் இருந்தா சொல்லு” என்று வசந்தகுமார் கொக்கிபோட,  3 லட்ச ரூபாய் பணம் கொடுத்து தம்பியையும் சேர்த்துவிடுகிறார்.  “டிபார்ட்மெண்ட் எக்ஸாம் நடத்துவாங்க. 3 மாசத்துல உன் தம்பி பர்மனெண்ட் ஆகிடுவாரு” நம்பிக்கையில் நங்கூரமிடுகிறார் வசந்தகுமார். மனைவியும் தம்பியும் அரசு வேலையில் சேர்ந்துவிட்டார்கள். தானும் சேர்ந்துவிட்டால், திருவள்ளூரிலுள்ள அரசு அலுவலகத்துத்திலிருந்து வேலைமுடித்து செங்குன்றம் வீட்டிற்கு வர சிரமப்படும் மனைவியின் கஷ்டமும் சரியாகிவிடும் என்று யோசித்த டுவின்பாபுவும் வசந்தகுமாரிடம் பணம் கொடுத்து பணியில் சேர்கிறார்.

போலி அரசு அலுவலகம் செயல்பட்டது இப்படித்தான்!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் சாலையில் இருக்கும் அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, தமிழ்நாடு அரசின் ‘வருவாய் மற்றும் பேரிடர் மீட்புத்துறை’ என்று பேனர் வைக்கப்பட்டு, கிட்டத்தட்ட 36 பேர் கொண்ட அந்த ’அரசு(?)’ அலுவலகம் பரபரப்பாய் இயங்கிக்கொண்டிருந்தது.

ரைட்டிங் டீம், சர்வே டீம், அட்மின் டீம், ஃபீல்டு ஒர்க் டீம் என 4 டீம்கள் அங்கே கோப்புகளுடன்  ‘தீயா வேலை செய்யுற கொமாரு’ என தீபாற்றாத குறையாய் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, டுவின்பாபுவுக்கு ஃபீல்டு அசிஸ்டெண்ட் அதாவது துணை நிலவை அளவையாளர் பணி ஒதுக்கப்படுகிறது. குறிப்பிட்ட, லொகேஷனை ஷேர் செய்வார்கள். அங்கு சென்று அந்த இடத்தை சர்வே செய்துவிட்டு வரவேண்டும். மற்றபடி யாரும் எந்த கேள்வியும் கேட்பதில்லை. தாலுகா அலுவலகத்திலிருந்து தையல் மெஷின் வாங்கிக் கொடுத்து ஃபோட்டோ எடுப்பார்கள். அரசின் சாலை திட்டத்தின் தகவல்களோடு பரபரப்பாக வருவார் வசந்தகுமார். இந்த ஆண்டிற்கான பட்ஜெட் மாறுகிறது. சாஃப்ட் காப்பியாக இருப்பதை ஹாட் காப்பியா கிரியேட் செய்ய சொல்வார். இதையெல்லாம் ரைட்டிங் டீம் கவனித்துக்கொள்ளும். 

லே-அவுட்கள் வரும், அதற்கான வரைபடங்களை எல்லாம் தயாரித்து தருவது சர்வேயர் டீம் .  இவர்கள் எல்லாம் என்ன வேலை செய்கிறார்கள்? ஃபீல்டு ஒர்க்கிற்கு செல்கிறவர்கள் எடுத்து அனுப்பும் ஃபோட்டோக்கள், பெட்ரோல் பில்லுகள்  எல்லாவற்றையும் வவுச்சர்கள் மூலம் கணக்கு வழக்குகளை மெயிண்டெய்ன் செய்வது அட்மின் டீம். வேலை பர்மெனண்ட் ஆனவர்களுக்கு மாத சம்பளம் ஸ்டாம்ப் ஒட்டிதான் வழங்கப்படும். 

தமிழக அரசின் அறிவுப்புகள், விடுமுறை அறிவுப்புகள், சர்குலர்கள் எல்லாம் டி.என்.ஆர்.டி அதாவது டிபார்ட்மெண்ட் ஆஃப் டிசாஸ்டர் மேனேஜ்மெண்ட் என்கிற மெயில் மூலம் வரும். அலுவலத்துக்கு சனிக்கிழமை விடுமுறை என்றால் அந்த மெயிலில் சர்குலர் வரும். அந்த மெயிலை அட்மின் டீம் எடுத்து சர்குலர் நோட்டில் எழுதியபிறகு, அனைவருக்கும் சுற்றறிக்கையாக காண்பிக்கப்படும். தினந்தோறும் வருகைப் பதிவேடு, நேரப்பதிவேடு. விசிட்டர்ஸ் பதிவேடு எல்லாம் நிர்வகிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் அன்று என்ன பணி செய்தார்கள் என்பதும் ரெக்கார்டு வைத்திருக்கவேண்டும். அந்த ரெக்கார்டு தினமும் ஜூனியர் அசிஸ்டெண்ட் வசந்தகுமார், அசிச்ஸ்டெண்ட் டைரக்டர் பிரவினா மார்க்ரெட், ரெக்கார்டு க்ளார்க் ஜான்சன் ஜெயக்குமார் அடங்கிய அட்மின் டீமுக்கு போகும். அவர்கள், அட்டெஸ்டேஷன் கொடுப்பார்கள். பணியில் குறை இருந்தால் மீட்டிங்கில் கடுமையாக டோஸ் விழும். 36 பேர் இல்லாமல் ஃபீல்டு ஒர்க்கிற்கும் தனியாக நியமிக்கப்பட்டு, மொத்தம் 51 பேர் இந்த பணியில் ஈடுப்பட்டுள்ளார்கள்.

எழிலகத்துக்கு செல்லும் சீலிடப்பட்ட கடிதங்கள்!

திடீரென்று தமிழக அரசின் அலுவலகங்கள் உள்ள எழிலகத்துக்கு கடிதங்களை கொண்டு செல்லவேண்டும் என்று பரபரப்பாக சொல்வார் வசந்தகுமார். பதிவு தபால்களை அரசு முத்திரை குத்தி கொடுத்தனுப்புவார். கடிதத்துடன் எழிலகத்துக்கு செல்லும்போது அதை பரபரப்பாக வாங்கி செல்லவும் ஆட்கள் அந்த செக்‌ஷனிலிருந்து வருவார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வந்து கடிதங்களை பெற்று செல்வார்கள். காலை 11 மணிக்கு கொடுக்க வேண்டும் என்றால், அலுவலகம் 10 மணிக்குதான். மிக முக்கியமான கடிதம் உடனே கொடுக்கவேண்டும் என்று வசந்தக்குமார் அவசரப்படுத்துவார்.

திருவள்ளூரிலிருந்து ரயிலில் 1 ½ மணிநேரம் ஆகிவிடும். அங்கு போக தாமதமாக செல்வதால், வருகிறவர்களும் பரபரப்பாக வாங்கி செல்வார்கள்.  

ஆடிட்டிங் அட்ராசிட்டி… டிபார்ட்மெண்ட் தேர்வுகூட நடத்திருக்காய்க!

திடீரென்று ஆடிட்டிங் வரப்போகிறார்கள் என்பார் வசந்தக்குமார். அதற்காக, அத்தனை கோப்புகளையும் எடுத்து சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளவேண்டும்.

வசந்தகுமார் அமர்ந்திருக்கும் மேசையில் முதல்வர் பின்னால் இருக்கும் புகைப்படங்களுடன் அவரது பணியின் பெயரும் வைக்கப்பட்டு, ரோலிங் சேர் ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கும். வருகிறவர்களை ரெக்கார்டு க்ளார்க் ஜான்சன் ஜெயக்குமாரை வைத்து நேர்முக தேர்வுகள் நடத்துவார்கள்.  

திடீரென்று சம்பந்தமே இல்லாமல்  விடுமுறை அறிவுப்புகள் வரும். எப்படி என்று கேட்டால், லோகோ போட்டு டி.ஆர்.ஓ அசோகன், சந்திரன் வருவாய் அலுவலகர்கள் பெயரில் சுற்றறிக்கைகள் வரும். எழிலகத்தில் அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக போராட்டத்தில் ஈடுபடுவதால் விடுமுறை என்று காரணம் கூறுவார் வசந்தக்குமார். இப்படியே கடந்த 1 ½ வருடங்களாக அலுவலகம் இயங்கியிருக்கிறது.

 ”கிரேஸ் பீரியட்ல இருக்கீங்க. லஞ்சப்புகார் வந்து மாட்டுனீங்கன்னா உங்களை பணியை விட்டு தூக்கிடுவாங்க” என்று எச்சரிப்பார் வசந்தகுமார். இதனால், அச்சத்தோடு கேள்வி கேட்காமல் பணியாற்றியிருக்கிறார்கள்.

எதைப்பற்றியும் யோசிக்கமுடியாத அளவுக்கு  வாக்காளர் படிவங்களை தயாரிப்பது என வேலை வாங்கிக்கொண்டிருப்பது, அந்த டார்கெட்டை முடிக்கிறவர்களுக்கு பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்துவது, பணியாற்றாதவர்களை மீட்டிங் வைத்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது, டிபார்ட்மெண்ட் தேர்வை நடத்தி மதிப்பெண் கொடுப்பது என பிஸியாகவே தொடர்ந்திருக்கிறது. திங்கட்கிழமை லேட்டாக வருவார். கேட்டால் கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்ல இருந்தேன் என்று சொல்வார் வந்தகுமார்.

வசந்தகுமார் அக்கவுண்டிலிருந்து கிரெடிட் ஆன சம்பளம்!

எந்த சந்தேகத்தை டுவின் பாபு எழுப்பினாலும் ஏதாவது ஒரு பதிலைக்கூறி சமாளித்துவிடுவார் வசந்தகுமார்.   

“சம்பளம் கவர்ன்மெண்ட் அக்கவுண்டிலிருந்துதானே வரணும்? வசந்தகுமார் என்று உன் அக்கவுண்டிலிருந்து எப்படி வருது?” என்று கேட்டிருக்கிறார் டுவின்பாபு.

 “எஸ்பிஐ அக்கவுண்ட் இருந்தா மட்டும்தான் அரசோட ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ் லிங் ஆகும்” என்று சமாளித்திருக்கிறார்.

கேள்வி கேட்டதிலிருந்து ஏ.டிஎம் மெஷின்  செக் பாஸ் செய்து எந்த பெயரிலிரிருந்து பணியாளர்களுக்கு பணம் செல்கிறது என்பதை மறைத்திருக்கிறார் வசந்தகுமார். இதெல்லாம், டிவின் பாபுவிற்கு சந்தேகத்தை உருவாக்க ஆரம்பித்தது. ஆராய ஆரம்பித்தபோதுதான், வசந்த குமார் அரசுப்பணியிலேயே இல்லை என்பது, டுவின்பாபுவுக்கு தெரியவந்து அதிர்ச்சி ஆகியிருக்கிறார். அதுமட்டுமல்ல, முதல் முதலில் மோடி ஸ்கீமில் கழிப்பறை கட்டுவதற்காக ஆய்வு செய்ய வந்தவர்களும் போலியானவர்கள். இயங்கி வந்த அரசு அலுவலகமும் போலியானது என்பது தெரியவர, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வசந்தகுமார் மீது புகார் கொடுத்தார் டுவின்பாபு.

போலீஸிடம் டுவிஸ்ட் அடித்த வசந்தகுமார்!

வசந்தகுமார் கைதுசெய்யப்பட்ட நிலையில், தானும் அரசு வேலைக்கு பணம் கொடுத்து ஏமாந்ததாக டிவிஸ்ட் அடித்திருக்கிறார் வசந்தகுமார். அவரது வாக்குமூலத்திலோ, “நான், போளிவாக்கத்திலுள்ள பள்ளியில் லேப் டெக்னிஷியனாக இருந்தபோது, அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய கைவண்டூரைச்சேர்ந்த ஜானகியின் மூலம் அரசு ஊழியரான மோகன் அவரது கணவர் அறிமுகமானார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசாங்க வேலை காலியாக இருக்கிறது. தெரிந்தவர்கள் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார்கள். அவர்களது பேச்சை நம்பி  போனபோது, ஸ்டாலின், வச்சலா அவரது கணவர் ராஜன் ஆகியோர் அறிமுகமானார்கள். 

2021 பிப்ரவரி-1 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் விருந்தினர் மாளிகையில் வைத்து 5 லட்சத்து 50,000 ரூபாய் பணம் கொடுத்தேன். தற்போதைக்கு, மாவட்ட சுற்றுலா விருந்தினர் மாளிகையில் எழுத்தர் பணி செய்யுமாறு கூறினார்கள். அவர்களின் பேச்சை நம்பி 6 மாதம் காலம் செய்தேன்.  வேலை பளு அதிகமாக இருப்பதால் இன்னும் ஆட்கள் தேவைப்படுகிறது என்று அவர்கள் சொன்னதால் எனக்கு தெரிந்தவர்களை சேர்த்துவிட்டேன்.  8 பேர் இருப்பதால் யூனிட் ஆஃபிஸ் வைத்து வேலைசெய்யவேண்டும் என்று சொன்னதால் காக்களூர் பைபாஸ் சாலை வள்ளலார் தெரிவு ஒரு மாடி வீட்டை வாடகைக்கு எடுத்து 2022 ஜனவரி 3 ஆம் தேதி அலுவகலம் திறந்தோம். அதற்குப்பிறகு இன்னும் பலரையும் வேலைக்கு சேர்த்தோம். ஆனால், நானும் அவர்களிடம் ஏமாந்துவிட்டேன்” என்கிற ரீதியில் கூறி, விசாரணை காக்கிகளை தலைசுற்ற வைத்திருக்கிறார்.

இதுகுறித்து, நாம் டுவின்பாபுவிடம் பேசியபோது, “வசந்தகுமார் ஏமாந்துவிட்டேன் என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. அவரது குடும்பப்பின்னணி எனக்கு தெரியும்.  அவருக்கு, 5 லட்ச ரூபாய் சொல்கிறார், அவரது தங்கை உட்பட 4 பேருக்கு 20 லட்ச ரூபாய்க்குமேல் கொடுத்து ஏமாறும் அளவுக்கு வசதியானவர் அல்ல. இவர், அரசுப்பணியிலுள்ள அதிகாரிகளின் துணையுடன் எங்களை ஏமாற்றியிருக்கிறார்.

அவரது தங்கை திருமணத்துக்கு எப்படி இவ்ளோ கிராண்டா செலவு பண்ணினாரு?  சேலரி ஸ்லிப்பை நெட்டுல ஸ்கேன் பண்ணினா, எம்ப்ளாயி நம்பர் சி.பி.எஃப் நம்பர் எல்லாமும் வருகிறது. பே ஸ்லிப்புல பார்கோடு எல்லாம் வருகிறது எப்படி? யாருடைய உதவியுடன் வசந்தகுமார் கிரியேட் பண்ணினார்?

தமிழக அரசின் லோகோவுடன் ஐ.எஃப்.ஹெச்.ஆர்.எம்.எஸ். போர்டல் எப்படி கிரியேட் செய்தார்?

ஆர்.ஐ. சதீஷ், ரேவதி, அசோகன், சந்திரன், சீனிவாசன் டி.ஆர்.ஓக்கள் என இவர்கள் எல்லாம் உண்மையிலேயே பணியாற்றுகிறார்களா? இவர்களது பெயரில் பணி ஆணைகள் வழங்கப்பட்டது எப்படி?

அரசு அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் தமிழ்நாடு வருவாய் துறை முத்திரையுடன் ஐ.டிகார்டு, பேனர், ரெக்கார்டு நோட்டுகள், கோப்புகள், எல்லாம் தயாரித்து கொடுத்தது எப்படி?” என்று கேள்வி எழுப்புகிறார்.

நாம் மேலும் விசாரித்தபோது, திருவள்ளூர் எம்.எஸ்.கே ஆயில் மில் அருகிலுள்ள எம்.எஸ்.கே கலர் லேபில்தான் வசந்தகுமார்  போலியான ஆவணங்களை தயாரித்துள்ளார் என்கிற தகவல் கிடைத்தது. இதுகுறித்து, எம்.எஸ்.கே. கலர் லேப் உரிமையாளர் குமாரசாமியை நாம் தொடர்புகொண்டு எந்த அடிப்படையில் ஐ.டிகார்டுகளை தயாரித்து கொடுத்தீர்கள் என்று நாம் கேட்டபோது, “நாங்கள் இந்த ஐ.டிகார்டை தயாரிக்கவே இல்லை” என்றார் மறுப்பாக.

வீட்டு உரிமையாளரிடம் ஒப்பந்தம் போட்டது எப்படி? தமிழ்நாடு அரசின் சுற்றுலா மாளிகை ஊழியர் ஸ்டாலின், நகராட்சி பணியாளர் வச்சலா மற்றும் அவரது கணவர் ராஜன், தனியார் பள்ளி ஆங்கில ஆசிரியையின் கணவரும் ஆதிதிராவிடர் விடுதி காப்பாளருமான மோகன் ஆகியோருக்கு பின்னால் இன்னும் யார் யார் இருக்கிறார்கள் என்று விசாரணையில் இறங்கியிருக்கிறது காவல்துறை.

இதுகுறித்து, விசாரணை செய்துவரும் மாவட்ட குற்றப்பிரிவு எஸ்.ஐ சுப்பிரமணியிடம் பேசியபோது, "வழக்குப்பதிவு செய்யப்பட்டபிறகு தலைமறைவாக உள்ள ஸ்டாலின், வச்சலா, ராஜன், மோகன் ஆகியோரை தேடிவருகிறோம். அரசு முத்திரைகளை எங்கு தயாரித்தார் என்பது குறித்தும் விசாரிக்கிறோம்" என்றார்.

கைதான வசந்தகுமார் உட்பட மற்றவர்கள் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்கள். அதற்குள், கைது செய்து விசாரிக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள்.

-மனோசெளந்தர், நவீந்தர்

Related Stories

No stories found.
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com