தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்
சேலம் பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் தீரன் சின்னமலை பேரவை யுவராஜ் உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதேபோல, வழக்கில் இருந்து ஐந்து பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் நடைபெற்றது.
யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களைச் சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளைச் சுட்டிக்காட்டி, தங்களுக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் வாதிட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மிகவும் திட்டமிட்டு கோகுல்ராஜ் கொல்லப்பட்டதாகவும் அரசு தரப்பு சாட்சிகளைச் சாட்சிகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவும் வாதிடப்பட்டது.
இதனிடையே கோகுல்ராஜ் கடைசியாக உயிருடன் காணப்பட்ட திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மற்றும் கோகுல்ராஜ் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ரயில் பாதை ஆகியவற்றை நீதிபதிகள் நேரில் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்