தரமான கரும்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து,பொங்கல் பரிசுத்தொகுப்புடன் முழு கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்த நிலையில், விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் குறித்து வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அரசுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் இடைத்தரகர்களுக்கு வேலை இல்லை. மாவட்ட ஆட்சியரின் நேரடி கட்டுப்பாட்டில் கரும்பு கொள்முதல் செய்யப்படும்.
மேலும்,வேளாண் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து கொள்முதலில் ஈடுபடும் என்றும் தரமான கரும்பு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், இதையும் மீறி இடைத்தரகர்களின் தலையீடு இருந்தால் காவல்துறை மூலம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.