புதுக்கோட்டை மாவட்டம்,முத்துக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம், இரட்டை குவளை முறை மற்றும் கோயிலில் பட்டியல் இன மக்களை அனுமதிக்காமலிருந்து வந்ததைத் தொடர்ந்து, அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக அம்மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களைக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று அதிரடி காட்டியது பலரிடம் இருந்தும் பாராட்டைக் குவித்தது.
இந்நிலையில் இறையூருக்கு நேரில் சென்று பார்வையிட்ட சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன், அங்குள்ள அய்யனார் கோயிலில் தீண்டாமையை எதிர்த்து நடத்தப்பட்ட சமத்துவ பொங்கல் வழிபாட்டில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்பேட்டியில், பட்டியலின மக்களுக்கு புதிய குடிநீர்த் தொட்டி கட்டித் தரப்படும் என்றும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இதுபோன்ற பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் குற்றங்கள் எந்த வடிவிலிருந்தாலும் 94433 14417 என்ற கைப்பேசி எண்ணிற்கு புலனம் (Whatsapp) மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவிக்கலாம் எனப் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.