வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட ஜவுளி வியாபாரி
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே தப்பைக்குட்டை கிராமம், கருப்பக்கவுண்டனூர் பகுதியைச்சேர்ந்த ஒருவர் சீனாவில் கடந்த 13 வருடங்களாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தனது மனைவி மகள் மற்றும் மகனுடன் கடந்த 27ஆம் தேதி, சீனாவில் இருந்து விமான மூலம் சிங்கப்பூர் வழியாக கோவை வந்தார்.
அப்போது அவர்களுக்கு கோவை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.இதனையடுத்து அனைவரும் சொந்த ஊரான இளம்பிள்ளைக்கு திரும்பினர்.
கோவையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டபோது, கொரோனா தொற்று பரிசோதனையில் இளம்பிள்ளை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.அதனால் அவரையும்,அவரது குடும்பத்தினரையும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து மருத்துவத்துறை அதிகாரிகள் காலை,மாலை என இரண்டு வேளைகளிலும் ஜவுளி வியாபாரி குடும்பத்தினரை கண்காணித்து வருகின்றனர்.
இருப்பினும், சீனாவில் தற்போது பரவி வரும் BF 7 தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய, மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கிராம சுகாதார செவிலியர் ஒருவர், ஜவுளி வியாபாரியின் வீட்டிலேயே தங்கி ,அவரின் உடல் நலம் குறித்து கவனித்து வருகிறார் என்றும், ஜவுளி வியாபாரி நலமுடன் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.